வேலூர் மாவட்டத்துக்கு ஒருசொட்டு தண்ணீரை வரவிடாமல் பாலாற்றின் குறுக்கே 22 அடி தடுப்பணையை 40 அடியாக உயர்த்தும் ஆந்திர அரசு

வேலூர், ஜூலை 24: வேலூர் மாவட்டத்துக்கு ஒருசொட்டு தண்ணீரை கூட வரவிடாமல் பாலாற்றின் குறுக்கே இருக்கும் 22 அடி உயர தடுப்பணையை ஆந்திர அரசு 40 அடி உயர்த்துக்கு கட்டும் பணியில் தீவிரம் காட்டி வருகிறது. இதனால் விவசாயம் பறிபோகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் சிக்பெல்லாபூர் மாவட்டம் நந்திதுர்கம் மலையில் உற்பத்தியாகும் பாலாறு, கர்நாடகத்தில் 93 கிலோமீட்டரும், ஆந்திர மாநிலத்தில் 33 கிலோ மீட்டரும், பாய்ந்து வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருேக உள்ள புல்லூர் என்ற இடத்தில் தமிழகத்துக்குள் நுழைகிறது. தமிழகத்தில் தான் அதிக அளவாக 222 கிலோமீட்டர் தூரம் பயணித்து காஞ்சிபுரம் மாவட்டம் வயலூர் அருகே வங்காள விரிகுடாவில் கலக்கிறது.

உச்சநீதிமன்ற உத்தரவுகளை மீறி ஏற்கனவே கர்நாடகத்தில் பாலாற்றின் குறுக்கே 3 தடுப்பணைகளும், ஆந்திர மாநிலத்தில் சிறிதும், பெரிதும் என மொத்தம் 21க்கும் மேற்பட்ட தடுப்பணைகளும் கட்டப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்துக்கு வர வேண்டிய தண்ணீர் அனைத்தும் அங்கேயே தடுத்து நிறுத்தப்படுகிறது. இதனால் வேலூர் மாவட்டத்தில் ஜீவநதியாக ஓடி பயனளித்து வந்த பாலாறு தற்போது தண்ணீரின்றி வறண்டு கிடக்கிறது. அதோடு பாலாறு இருந்தும் குடிநீருக்கே வழியில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது ஆந்திராவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும், காட்சிமாறாது என்ற அடிப்படையில், புதிய ஆட்சியில் பொறுப்பேற்றுள்ள ஜெகன் மோகன் ரெட்டி அரசும் பாலாற்றின் குறுக்கே தடுப்பணைகளை உயர்த்தி கட்டுவதில் தீவிரம் காட்டி வருகிறது.

அதாவது, வேலூர் மாவட்டத்தில் வாணியம்பாடி அருகே ஆந்திரா மாநிலம் பாலாறு கிராமத்தில் கிடிமானிபெண்டா செல்லும் சாலைக்கு அருகில் கங்குந்தி தடுப்பணையை தற்போது உயர்த்தி கட்டி வருகிறது. பாலாற்றின் குறுக்கே அமைந்துள்ள இந்த தடுப்பணை ஏற்கனவே ஏழரை அடி உயரம் இருந்தது. அதை கடந்த சில மாதங்களுக்கு முன்பு 22 அடியாக உயர்த்தி கட்டப்பட்டது. தற்போது மீண்டும் அந்த தடுப்பணையை 22 அடி உயரத்திலிருந்து 40 அடி உயரமாக உயர்த்தும் பணிகள் கடந்த 15 நாட்களாக முழுவீச்சில் நடந்து வருகிறது. மேலும் பாலாற்று பகுதியில் மணலையும் ஆழப்படுத்தி நீர் கொள்ளவையும் உயர்த்தும் பணிகளும் நடைபெற்று வருகிறது. இந்த பணிக்காக ஆந்திர அரசு தற்போது ₹43 கோடி நிதி ஒதுக்கி உள்ளது. இந்த நிதியில் இருந்து கங்குந்தி தடுப்பணை உட்பட அதராமகிருஷ்ணாபுரம், கணேசபுரம், சாந்திபுரம், போகிலிரே, கிடிமானிபெண்டா போன்ற இடங்களில் தடுப்பணைகள் கட்டும் பணிகள் நடந்து வருகிறது.

ஏற்கனவே பாலாற்றில் தடுப்பணைகளை கட்டிய வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் அதை பற்றியெல்லாம் கவலைப்படாமல் தடுப்பணையை உயர்த்தும் பணியில் ஆந்திர அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதனால் தமிழகத்திற்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட கிடைக்காத நிலையை ஆந்திர அரசு செய்து வருகிறது. இதனால் தமிழகத்தில் வேலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு குடிநீர் தட்டுபாடு ஏற்படுவதுடன் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்படும். அவர்களின் வாழ்வாதரம் கேள்விக்குறியாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் கூறுகையில், ‘ஆந்திர அரசு தொடர்ந்து உச்சநீதிமன்ற உத்தரவை மீறி தடுப்பணைகளை உயர்த்தி கட்டிவருகிறது. இது தொடர்பாக தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மவுனம் காத்து வருவதால் ஆந்திர அரசு தொடர்ந்து தடுப்பணைகளை கட்டி வருகிறது. இதை உடனடியாக உச்சநீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு சென்று தடுத்த நிறுத்த வேண்டும்.

அதற்கான பணியில் தமிழக அரசு ஈடுபட வேண்டும். அப்போது தான் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற முடியும். இப்படியே சென்றுகொண்டிருந்தால் வரும் காலங்களில் பாலாற்றில் தண்ணீரை பார்க்க முடியாத சூழ்நிலை ஏற்படும். இந்த விஷயத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சினரும் ஒன்று இணைந்து ஆந்திர அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்’ என்றனர்.

Related Stories: