நீர்நிலை பகுதியில் வசித்து வந்த 27 குடும்பங்களுக்கு மாற்று இடத்துக்கு பட்டா

உத்திரமேரூர், ஜூலை 24: உத்திரமேரூர் அருகே நீர்நிலை பகுதியில் வசித்து வந்த 27 குடும்பங்களுக்கு மாற்று இடத்துக்கான பட்டா வழங்கப்பட்டது.உத்திரமேரூர் பேரூராட்சிக்கு உட்பட்ட சோமநாதபுரம் பகுதியில் சுமார் 1 ஏக்கர் பரப்பளவில் பாப்பாங்குளம் உள்ளது. இக்குளக்கரையில் சிலர் ஆக்கிரமித்து வீடுகள் கட்டி வசிக்கின்றனர்.கடந்த ஆண்டு, மேற்கண்ட குளத்தை தூர்வாரி சீரமைக்க வேண்டும். அதற்கு, இடையூராக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பேரூராட்சி நிர்வாகம் வலியுறுத்தியது. ஆனால், அங்கு வசித்து வந்தவர்கள், தங்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதேப்போல் காக்கநல்லூர் கிராம குளக்கரைகளில் ஆக்கிரமித்து வசித்து வந்த இருளர் மற்றும் பழங்குடியின குடும்பத்தினர் நீர்நிலைகளுக்கு பதிலாக மாற்று இடம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

அதன்பேரில் வட்டாட்சியர் சாந்தி தலைமையிலான வருவாய்துறை அலுவலர்கள் பேரூராட்சிக்கு உட்பட்ட ஆணைப்பள்ளம் - காக்கநல்லூர் சாலையில் உள்ள இடங்களை ஆய்வு செய்தனர். அதில், இருளர் உட்பட மொத்தம் 27 குடும்பத்தினருக்கு இடம் தேர்வு செய்தனா். இதையடுத்து, 27 குடும்பங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட இடத்துக்கான பட்டா வழங்கப்பட்டது. தொடர்ந்து, மாற்று இடம் பெற்ற அனைவரும் விரைவில் நீர்நிலைகளை காலி செய்து, தங்களுக்கு வழங்கப்பட்ட இடத்துக்கு செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

Related Stories: