இந்து அறநிலையத்துறை அனுமதியின்றி பிரணவமலை கோயிலில் நடத்தப்பட்ட திடீர் யாகம்

சென்னை, ஜூலை 24: அறநிலையத்துறை அனுமதியின்றி, பிரணவமலைக் கோயிலில் நடத்தப்பட்ட யாகத்தால், திருப்போரூர் அருகே பரபரப்பு ஏற்பட்டது.சென்னை அருகே திருப்போரூரில் புகழ் பெற்ற முருகன் கோயில்களுள் ஒன்றான கந்தசுவாமி கோயில் உள்ளது. இந்த கோயிலை தமிழக இந்து சமய அறநிலையத்துறை பராமரித்து வருகிறது.இக்கோயில் பராமரிப்பில் திருப்போரூர் பிரணவமலையில் உள்ள கைலாசநாதர் கோயில், வேண்டவராசி அம்மன் கோயில், முள்ளச்சி அம்மன் கோயில், வேம்படி விநாயகர் கோயில் உள்பட பல்வேறு கோயில்கள் உள்ளன.இந்நிலையில் திருப்போரூர் பிரணவமலையில் அமைந்துள்ள பாலாம்பிகை உடனுறை கைலாசநாதர் கோயில் வளாகத்தில் காலச் சக்கர யாகம் நடைபெற உள்ளதாக திருப்போரூர் பகுதியில் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. மேலும் பல்வேறு இடங்களிலும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. ஆனால், துண்டு பிரசுரங்கள், போஸ்டர்களில் இந்த யாகத்தை நடத்துவது யார் என்ற விபரம் எதுவும் இல்லை.இந்நிலையில் நேற்று மாலை 3 மணியளவில் பிரணவமலை கோயில் வளாகத்தில் 18 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டன. இந்த யாக குண்டங்களுக்கு நடுவில் மற்றொரு பெரிய யாக குண்டம் அமைத்து, அனைத்திலும் நெய், அரிசி, பொரி, தானியங்கள் ஆகியவை கொட்டப்பட்டு 18 யாக குண்டங்களுக்கும் முன்பாக 18 பேர் அமர்ந்து யாகம் வளர்க்கப்பட்டது.

இந்த யாகத்தை நடத்துவது யார், 18 குண்டங்களுக்கு முன்பாக அமர வைக்கப்பட்ட 18 பேர் யார் என்ற விபரத்தை கேட்டபோது, யாரும் கூறவில்லை. இது கோயில் இடம் இல்லை, தொல்லியல்துறைக்கு சொந்தமான இடம் என்பதால் மத்திய அரசின் அனுமதி பெற்று விட்டோம் என்று மட்டுமே பதில் கூறினர்.இதுகுறித்து திருப்போரூர் கந்தசுவாமி கோயில் செயல் அலுவலர் சக்திவேலிடம் கேட்டபோது, இதுபோல் யாகம் நடத்த யாருக்கும் அனுமதி தரவில்லை. யாகம் நடத்துபவர்கள் யார், அவர்கள் யாருக்காக, எதற்காக நடத்துகிறார்கள் என்பது தெரியாது என்றார்.இதைத் தொடர்ந்து அவர் பிரணவமலைக்கு சென்று, யாகம் நடப்பதை பார்வையிட்டு சென்றார். இந்து அறநிலையத்துறை வளாகத்தில் யார் வேண்டுமானாலும் யாகம் வளர்க்க முடியுமா, அதற்கு அறநிலையத்துறை அனுமதி வழங்குகிறதா, அனுமதி இல்லாமல் யாகம் வளர்த்தது எப்படி, இதற்கான செலவினங்களை யார் செய்தார்கள் என்ற கேள்விகளுக்கு பதில் இல்லை.

Related Stories: