தாம்பரம் - படப்பை வழி தடத்தில் இயக்கப்பட்ட மாநகர பஸ்கள் திடீர் நிறுத்தம்: பயணிகள், மாணவ, மாணவிகள் கடும் அவதி

பெரும்புதூர், ஜூலை 24: தாம்பரம் - படப்பை வழிதடத்தில் இயக்கப்பட்ட மாநகர பஸ்கள் திடீரென நிறுத்தப்பட்டன. இதனால் பயணிகள், மாணவ, மாணவிகள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர்.குன்றத்தூர் ஒன்றியம் மணிமங்கலம் ஊராட்சியில் மணிமங்கலம், பாரதி நகர், புஷ்பகிரி, காந்தி நகர், அண்ணா நகர், இந்திரா நகர், பெரிய காலனி ஆகிய பகுதிகளில் 8 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். மேற்கண்ட பகுதியில் உள்ள மாணவ, மாணவிகள், படப்பையில் உள்ள அரசு மகளிர் மற்றும் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிக்கின்றனர். மேலும் படப்பையில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகம், வங்கி, கூட்டுறவு வேளாண் வங்கி உள்பட பல்வேறு அரசு துறை அலுவலகங்களுக்கு ஏராளமான மக்கள் தினமும் சென்று வருகின்றனர். புஷ்பகிரி பகுதியில் பழம், மலர் வகை, செடிகள் மற்றும் குரோட்டன் செடிகள் பயிரிடப்பட்டு தாம்பரம் மற்றும் புறநகர் பகுதிகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்யப்படுகிறது.இந்த கிராமத்தில் இருந்து தாம்பரம் வழியாக குரோம்பேட்டை, கிண்டி, சைதாப்பேட்டை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிக்கும் ஏராளமான மாணவர்கள் சென்று வருகின்றனர்.தாம்பரத்தில் இருந்து முடிச்சூர், மணிமங்கலம், புஷ்பகிரி, காந்தி நகர் வழித்தடத்தில் படப்பை பகுதிக்கு மாநகர பஸ் (தஎ 80) இயக்கப்பட்டன. தாம்பரத்தில் இருந்து இயக்கப்பட்ட 2 பஸ்களும் கடந்த ஆண்டுகளுக்கு முன் சாலை பழுதை காரணம் காட்டி முன் அறிவிப்பின்றி திடீரென நிறுத்தப்பட்டன.

இதனால் படப்பைக்கு செல்லும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் மற்றும் தோட்டக் கலை விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இதுகுறித்து மணிமங்கலம் கிராம மக்கள் கூறுகையில், தாம்பரத்தில் இருந்து மணிமங்கலம் வழியாக படப்பை வரை இயக்கப்பட்ட மாநகர பஸ்கள் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் எந்த அறிவிப்பும் இல்லாமல் நிறுத்தப்பட்டன. இதனால் பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்கு செல்லும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம். வசூல் குறைவாக உள்ளதாகவும், புஷ்பகிரி - படப்பை சாலை பழுதை காரணம் காட்டி பஸ் சேவையை நிறுத்திவிட்டனர். கிராம புறங்களில் இருந்து நகர் பகுதிகளுக்கு செல்லவே அரசு மாநகர பஸ்கள் இயக்கப்பட்டன. இதைவிட குறைவாக வசூலாகும் பல கிராமங்களுக்கு அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன.ஆனால் வளர்ச்சியடைந்து வரும் எங்கள் பகுதியில் இயக்கப்பட்ட பஸ் சேவையை திடீரென நிறுத்த என்ன காரணம் என்று தெரியவில்லை. மேலும் படப்பை - புஷ்பகிரி சாலை கடந்த மாதம் சீரமைக்கப்பட்டுள்ளது. எனவே நிறுத்தப்பட்ட மாநகர பஸ்களை மீண்டும் இயக்க வேண்டும். இல்லை என்றால் போராட்டம் நடத்த உள்ளோம் என்றனர்.

Related Stories: