நகராட்சி அதிகாரிகளின் அலட்சியத்தால் இரு சக்கர வாகன நிறுத்தும் இடத்தை மின்சார வாரியம் ஆக்கிரமிப்பு: வாகனங்களை நிறுத்த இடம் இல்லாமல் நெருக்கடி

செங்கல்பட்டு, ஜூலை 24: . செங்கல்பட்டில் பழமையான ரயில் நிலையம் செயல்படுகிறது. தென் மாவட்டங்களில் இருந்து திருச்சி, மதுரை, திருநெல்வேலியில் இருந்து சென்னைக்கும் புதுச்சேரி, திருப்பதி வழியாக மும்பைக்கும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் செங்கல்பட்டு வழியாக இயக்கப்படுகின்றன. செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் வழியாக சென்னை கடற்கரைக்கும், செங்கல்பட்டில் இருந்து காஞ்சிபுரம் வழியாக திருமால்பூர், அரக்கோணத்துக்கும், செங்கல்பட்டில் இருந்து மேல்மருவத்தூர் வழியாக விழுப்புரத்துக்கும் மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதனால், இந்த ரயில் நிலையம் மிகவும் பரபரப்பாக காணப்படும்.மேலும், மேற்கண்ட ஊர்களுக்கு வேலைக்கு செல்பவர்கள், கூலித் தொழிலாளர்கள் செங்கல்பட்டு ரயில் நிலையம் வந்து, அங்கு தங்களது வாகனத்தை நிறுத்திவிட்டு வேலைக்கு சென்று வருகின்றனர்.செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் உள்ள இரு சக்கர வாகன பார்க்கிங் பகுதியில், போதுமான இடமில்லை. இதனால், வாகனங்கள் சாலையில் கண்டபடி நிறுத்தப்படுகின்றன. இதையொட்டி ரயில் நிலையம் செல்லும் வழி, கடைகள், பிளாட்பாரம், தபால் நிலையம் செல்லும் வழி என எங்கு வேண்டுமானாலும் வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால் பாதசாரிகள் செங்கல்பட்டு ரயில் நிலையம் செல்வதற்கு, கடும் அவதியடைகின்றனர்.

இரு சக்கர வாகனங்கள் நிறுத்த போதுமான இடம், ரயில் நிலையத்தில் இல்லை. கடந்த 2 மாதத்துக்கு முன்பு செங்கல்பட்டு நகராட்சி மூலம் இரு சக்கர வாகன நிறுத்தம் அமைக்க டெண்டர் விடப்பட்டது. ஆனால் அந்த பகுதியில் மின்சார வாரியத்தின் பொருட்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால், இரு சக்கர நிறுத்தம் அமைக்க முடியவில்லை.தினமும் 25 ஆயிரம் பைக்குகள் சாலைகளில் நிறுத்தப்படுகின்றன. வாகன நிறுத்தத்துக்கு வெளியெ எங்கு நிறுத்தினாலும் கட்டண கொள்ளை நடக்கிறது. நகராட்சி மூலம் இரு சக்கர வாகன நிறுத்தம் அமைத்தால் நகராட்சிக்கும் வருமானம் கிடைக்கும். போக்குவரத்து நெரிசலும் குறையும்.எனவே டெண்டர் விட்டு 2 மாதம் முடிந்தும் இதுவரை இரு சக்கர வாகன நிறுத்தம் அமைக்க, நகராட்சி நிர்வாகம் முன்வரவில்லை. இதற்கு காரணம், இரு சக்கர வாகன நிறுத்தம் அமைக்கப்பட இருந்த இடம், தற்போது மின்சார வாரியத்தின் பிடியில் உள்ளது. அதனால், மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க நகராட்சி அதிகாரிகளும் முன் வரவில்லை,.இதனால் புற்றீசல்கள் போல் வீடுகள், கடைகள், ரயில்வே குவாட்டர்ஸ் ஆகிய பகுதிகளில் தனியார் இரு சக்கர வாகன நிறுத்தங்கள் உருவாகி வருகின்றன. இதனால் நகராட்சிக்கு வருமான இழப்பு ஏற்படுகிறது. எனவே, உடனடியாக அடுக்குமாடி இரு சக்கர வாகன நிறுத்தம் அமைக்க, நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

Related Stories: