வந்தவாசி அருகே பரபரப்பு கிணற்றில் புழுக்களுடன் மிதந்த சாக்குப்பை 3 மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்

வந்தவாசி, ஜூலை 24: வந்தவாசி அருகே கிணற்றில் புழுக்களுடன் மிதந்த சாக்குப்பையை தீயணைப்பு வீரர்கள் 3 மணி நேரம் போராடி மீட்டனர். வந்தவாசி அடுத்த தென்னாங்கூர் கிராமத்தில் நெடுஞ்சாலையை ஒட்டியவாறு உள்ள விவசாய கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக நேற்று அப்பகுதி மக்கள் வந்தவாசி வடக்கு ேபாலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், சப்-இன்ஸ்ெபக்டர் பாஸ்கரன், தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது, கிணற்றில் புழுக்களுடன் மிதந்த சாக்குப்பையில் இருந்து தான் துர்நாற்றம் வருவது தெரியவந்தது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் டிஎஸ்பி தங்கராமனுக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு விரைந்து வந்த டிஎஸ்பி, துர்நாற்றம் அதிகளவில் வீசுவதால் சடலமாக இருக்கலாம் என நினைத்து, சடலத்தை மீட்க வந்தவாசி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

அதன்பேரில், தீயணைப்பு நிலைய அலுவலர் திருமுருகன் தலைமையிலான வீரர்கள், சம்பவ இடத்திற்கு வந்து, கிணற்றில் இறங்கி 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு சாக்குப்பையை மேலே கொண்டு வந்தனர். பின்னர், பிரித்து பார்த்தில் செம்மறி ஆட்டை சாக்குப்பையில் கட்டி கிணற்றில் வீசியுள்ளது தெரியவந்தது. இதனால் போலீசாரும், அங்கிருந்த பொதுமக்களும் நிம்மதியடைந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: