குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் மறியல் செய்யாறு அருகே பரபரப்பு

செய்யாறு, ஜூலை 24: செய்யாறு அருகே சீரான குடிநீர் வழங்கக் கோரி பொதுமக்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.செய்யாறு அடுத்த வடதண்டலம் கிராமத்தில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த கிராமத்தில் உள்ள மேட்டுத்தெரு, ரோட்டுத்தெரு, இந்திரா நகர், மதுராகனிகாபுரம் ஆகிய பகுதிகளுக்கு கடந்த 12 நாட்களாக சரிவர குடிநீர் விநியோகம் செய்யவில்லை.  இதுகுறித்து, அப்பகுதி பொதுமக்கள் டேங்க் ஆபரேட்டர் மற்றும் ஊராட்சி செயலாளரிடம் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், ஆத்திரமடைந்த 100க்கும் மேற்பட்ேடார் நேற்று காலை காலிகுடங்களுடன் செய்யாறு-ஆரணி சாலையில் வடதண்டலத்தில் மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த பிடிஓ மூர்த்தி, சப்-இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி மற்றும் போலீசார் வந்து மறியலில் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கிராமமக்கள், ‘சீரான குடிநீர் வழங்கக்கோரி டேங்க் ஆப்ரேட்டர், ஊராட்சி செயலாளரிடம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இருவரும் ஒருதலைபட்சமாக செயல்படுகின்றனர். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் உடனே குடிநீர் வழங்க வேண்டும்'''' என்றனர். இதுகுறித்து விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், இன்றைக்குள்(நாளை) குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதனை ஏற்ற பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். மறியலால் அப்பகுதியில் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories: