நூறு நாள் வேலைத்திட்ட நிதியில் ஏரிகளை தூர்வார எதிர்ப்பு கையில் உப்பு ஏந்தி விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டம் திருவண்ணாமலையில் நடந்தது

திருவண்ணாமலை, ஜூலை 24: நூறு நாள் வேலைத்திட்ட நிதியில் இருந்து, ஏரிகளை தூர்வாருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் கையில் உப்பு ஏந்தி நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன், நூறு நாள் வேலைத்திட்ட உழவர் பேரவை சார்பில் நூதன கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. பேரவை ஒருங்கிணைப்பாளர் புருஷோத்தமன் தலைமை தாங்கினார். போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள், தட்டு, கையில் உப்பு ஏந்தியபடி, நூறு நாள் வேலைத்திட்டத்தை அழிக்காதே, நீர் நிலைகளை இயந்திரத்தின் மூலம் தூர்வார நூறு நாள் வேலை திட்ட நிதியை பயன்படுத்தாதே என முழக்கமிட்டனர். விவசாயிகளின் இந்த நூதன போராட்டத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த போராட்டம் குறித்து விவசாயிகள் தெரிவித்ததாவது: தமிழகத்தில் உள்ள ஏரிகள், குளங்களை தூர்வார ₹1,250 கோடி நிதி ஒதுக்கியிருப்பதாக, சமீபத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவித்தார். அதை வரவேற்கிறோம். ஆனால், அதற்கான நிதியை நூறு நாள் வேலைத்திட்டத்தில் இருந்து எடுத்து பயன்படுத்தக்கூடாது.

நூறு நாள் வேலைத்திட்டத்துக்கான நிதியில் இருந்து ₹750 ேகாடியை ஏரிகள் தூர் வார பயன்படுத்த உள்ளனர். ராட்சத இயந்திரங்களை பயன்படுத்தி தூர் வாருவதால், கான்ட்ராக்டர்கள் மட்டுமே லாபம் பெறுவார்கள். ஆண்டுக்கு நூறு நாள் வேலை வழங்குவது 75 நாட்களாக குறையும்.  கடுமையான வறட்சியிலும், நூறு நாள் வேலையில் கிடைக்கும் கூலிதான், கிராமங்களில் உள்ள ஏழை விவசாயிகளை, விவசாய தொழிலாளர்களை காப்பாற்றுகிறது. இந்த வேலையில்லாவிட்டால், பிழைப்புக்காக நகரங்களை நோக்கி செல்வார்கள். நூறு நாள் வேலை இழந்தால், வயிற்று பசியால் மக்கள் தவிப்பார்கள் என்பதை உணர்த்தவே, சாப்பிடும் தட்டும், கையில் உப்பையும் ஏந்தி போராட்டம் நடத்துகிறோம். ஏரிகளை தூர்வார மத்திய அரசிடம் இருந்து சிறப்பு நிதியை பெற்று தமிழக அரசு செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories: