வாங்காத போதும் வருகிறது எஸ்எம்எஸ் ரேஷன் பொருட்கள் வழங்காததை கண்டித்து பெண்கள் சாலைமறியல் கம்பத்தில் பரபரப்பு

கம்பம், ஜூலை 23:  கம்பத்தில் ரேஷன் கடையில் பொருட்கள் வழங்காததை கண்டித்து பெண்கள்  சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கம்பத்தில் கம்பம் 108 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் கீழ் ஏழு கடைகளும், உத்தமபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் கீழ் ஆறு கடைகளும், கம்பம் ஸ்டோருக்கு உட்பட்ட ஆறு கடைகள், மகளிர் கடை என இருபத்தி இரண்டு கடைகள் உள்ளன. இந்த கடைகளின் மூலம் தமிழக அரசு வழங்கும் இலவச அரிசி, குறைந்த விலையில் கோதுமை, பாமாயில், பருப்பு, சீனி போன்றவை பொதுமக்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படுகிறது. இதில் கம்பமெட்டு ரோட்டில் 4ம் நம்பர் ரேஷன் கடை செயல்பட்டு வருகின்றது. 1430 ரேஷன் கார்டுகள் உள்ள இந்த கடைக்கு வரும் பொதுமக்களுக்கு முறையாக பொருட்கள் வழங்கவில்லை என தெரிகிறது. தற்போது அரிசி சப்ளையில் புழுங்கல் அரிசிக்கு பதிலாக பச்சரிசி மட்டுமே வழங்கி உள்ளனர். இது குறித்து பொதுமக்கள் கடை விற்பனையாளர்களிடம் விபரம் கேட்டும் அவர்கள் முறையான பதில் அளிக்கவில்லை. மேலும் மாதந்தோறும் வழங்கக்கூடிய பாமாயில் எண்ணெய் இரண்டு மாதத்திற்கு ஒரு முறை வழங்கி உள்ளனர். ஆனால், ரேஷன் பொருட்கள் வாங்காத பொதுமக்களுக்கு, பொருட்கள் வாங்கியதாக எஸ்எம்எஸ் வந்துள்ளது. இதனால்  ஆவேசமடைந்த அப்பகுதி பெண்கள் நேற்று கடையை முற்றுகையிட்டும், கம்பமெட்டு சாலையை மறித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கம்பம் வடக்கு எஸ்ஐக்கள் வினோத்ராஜா, பவுன்ராஜ் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் பொருட்கள் வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததன் பேரில்  பெண்கள் போராட்டத்தை கைவிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: