மாநிலத்தின் சிறந்த டாக்டர் தேனி டாக்டருக்கு விருது

தேனி, ஜூலை 23:  அகில இந்திய மருத்துவக் கழகத்தால் மாநிலத்தின் சிறந்த டாக்டர் விருது தேனி டாக்டருக்கு வழங்கப்பட்டது. அகில இந்திய மருத்துவக் கழகத்தின் தமிழ்நாடு கிளை சார்பில் ஆண்டு தோறும் மாநில அளவில் சிறந்து விளங்கும் டாக்டர்களுக்கு சிறந்த டாக்டர் விருது வழங்கி கவுரவிக்கப்படுகின்றனர். இவ்விருது ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் நடத்தப்படுவது வழக்கம். இவ்வாண்டுக்கான விருது வழங்கும் விழா இந்திய மருத்துவ கழகத்தின் தமிழ்நாடு கிளையின் சார்பில் சென்னையில் நடந்தது. இவ்விழாவில் இந்திய மருத்துவக்கழக மாநில தலைவர் டாக்டர்.கனகசபாபதி தலைமை வகித்தார். தமிழக சுகாதாரத் துறை செயலாளர் பீலிராஜேஷ், இந்திய மருத்துவக்கழக தேசிய துணைத் தலைவர் ஜெய்லால் முன்னிலை வகித்தனர். இந்திய மருத்துவக் கழக மாநில செயலாளர் டாக்டர்.ஸ்ரீதர் வரவேற்றார். விழாவின்போது தலைமைப்பண்பில் சிறந்து விளங்கும் மருத்துவர்களுக்கான பிரிவில் தேனி என்ஆர்டி மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர்.தியாகராஜனுக்கு சிறந்த மருத்துவருக்கான விருதினை தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வழங்கினார். இவ்விழாவில் தமிழக மருத்துவக் கல்வி இயக்குநர் எட்வின்ஜே, மருத்துவ நலப்பணிகளின் இயக்குநர் டாக்டர்.சுவாதிரத்னாவதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: