கூடலூரில் காணாமல் போன வண்டிப்பாதை ஆக்கிரமிப்பை அகற்ற தயங்கும் அதிகாரிகள்

கூடலூர், ஜூலை 23:  கூடலூர் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரப்பகுதியில், சுமார் நாற்பது ஆண்டுகளாக ஆக்கிரமிப்பில் உள்ள அரசுக்கு சொந்தமான விவசாய வண்டிப்பாதையில், ஆக்கிரமிப்புகளை அகற்றி பயன்பாட்டிற்கு கொண்டு வருவதில் அதிகாரிகள் தயக்கம் காட்டுவதாக விவசாயிகள் புகார் கூறியுள்ளனர்.கூடலூர் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதியான மச்சக்கல் புலத்தில் இருந்து துவங்கி சடையன்குளம், புதுக்குளம் ஒழுகால், மந்தைக்குளம், சரித்தரவு, பெருமாள்கோயில், கழுதைமேடு ஆகிய பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயம் நடந்து வருகிறது. மச்சக்கல் புலத்தில் இருந்து கழுதைமேடு வரை 40 ஆண்டுகளுக்கு முன் 7 கி.மீ தூரம் வரை குறுக்கு வண்டிப்பாதை இருந்துள்ளது.

இந்தப்பாதையை சில விவசாயிகள் முழுமையாக ஆக்கிரமித்து விவசாயம் செய்து வருகின்றனர். இப்பாதை ஆக்கிரமிப்பில் உள்ளதால், அப்பகுதியில் உள்ள நூற்றுக்கணக்கான விவசாயிகள், தங்கள் நிலத்து விளைபொருட்களை வெளியே கொண்டு வருவதில் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகினர்.இந்நிலையில் ஆக்கிரமிப்பை அகற்றி மீண்டும் வண்டிப்பாதை அமைத்துத்தர மாவட்ட நிர்வாகத்திற்கு விவசாயிகள் மனு அனுப்பியிருந்தனர். அதனடிப்படையில் கடந்த ஜனவரியில் ஆக்கிரமிப்பாளர்களுக்கு கூடலூர் நகராட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. உடனடியாக ஆக்கிரமிப்பை அகற்ற உள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவித்திருந்தனர். ஆனால், ஏழு மாதங்களாகியும் அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற முன்வரவில்லை. இந்த விஷயத்தில் ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரிகள் தயக்கம் காட்டுவதால், மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்றி வண்டிப்பாதையை மீணண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: