ஆண்டிபட்டி அருகே மயானகுளத்தை தூர் வார விவசாயிகள் கோரிக்கை

ஆண்டிப்பட்டி, ஜூலை 23:  ஆண்டிபட்டி அருகே உள்ள மயானகுளத்தை தூர்வார வேண்டும் என விவசாயிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.ஆண்டிபட்டி அருகே ஜி.உசிலம்பட்டி கிராமத்திற்கு கிழக்கே வேலுச்சாமிபுரம் செல்லும் சாலையில் மயானகுளம் உள்ளது. இந்தக் குளத்திற்கு, மழைக்காலங்களில் விருமானுக்கு ஓடை, நாகலாறு  ஓடை  மூலமாக நீர்வரத்து ஏற்படும். மேலும் இந்த நீரை நம்பி, இந்தக் குளத்தில் மொட்டனூத்து, ஒக்கரைப்பட்டி மற்றும் ஜி.உசிலம்பட்டி ஊராட்சியினர்எட்டுக்கும் மேற்பட்ட ஆழ்துளை கிணறுகள் அமைத்து குடிநீர் வழங்கி வருகின்றனர்.ஆனால், கடந்த பல ஆண்டுகளாக இந்த குளத்திற்கு வரும் நீர் வரத்து ஓடையை சிலர் ஆக்கிரமித்து கொண்டனர். இதனால் மழைக்காலங்களில் இந்த குளத்திற்கு தண்ணீர் வருவது இல்லை. இதனால் நிலத்தடி நீர்மட்டம் சரிந்து இந்தக் குளத்தில் உள்ள ஆழ்துளை கிணறுகளில் ஒன்று மட்டுமே குறைந்தளவு தண்ணீருடன் செயல்பட்டு வருகிறது. மேலும் குளத்தின் உள் பகுதியில் சீமைக்கருவேல் மரங்கள் ஆக்கிரமித்து உள்ளதாலும், கிராமத்தில் உள்ள  குப்பைகளை கொட்டுவதாலும் குளம் மேடாகி காணப்படுகிறது. இதனால் குளத்திற்கு ஒரு சில நேரங்களில் மழைநீர் வந்தாலும் முழுமையாக வெளியேறி விடுகிறது. எனவே, குடிநீர் ஆதாரமாக திகழும் இந்த குளத்தை தூர் வார வேண்டும் என்று தேனி மாவட்ட கலெக்டருக்கு விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: