தேனி மாவட்டத்தில் திடீர் பணியிட மாற்றத்தால் கூட்டுறவு செயலாளர்கள் கலக்கம்

தேனி, ஜூலை 23: தேனி மாவட்டத்தில் கூட்டுறவு சங்க செயலாளர்கள் திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் கூட்டுறவு செயலாளர்கள் மத்தியில் கலக்கம் ஏற்பட்டுள்ளது. தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் உள்ளிட்ட கூட்டுறவு சங்கங்களில் செயலாளர்களாக பணிபுரிவோர் பணிக்காலம் முழுமையும் அதே கூட்டுறவு சங்கத்தில் பணிபுரிந்து ஓய்வு பெறுவது வழக்கம். தற்போது, தமிழக அரசு கூட்டுறவுச் சங்கங்களில் பணிபுரியும் செயலாளர் பணிப்பொறுப்புகளில் உள்ளவர்களை வேறுவேறு கூட்டுறவு சங்கங்களுக்கு செயலாளர்களாக பணியிட மாற்றம் செய்யும் ஆணையை பிறப்பித்தது.ஒரு கூட்டுறவு சங்கத்தை மிகச் சிறப்பாக நடத்தி, அந்த சங்கத்திற்கு உள்ளூரில் முக்கிய பிரமுகர்களை சந்தித்து அதிக வைப்புத் தொகையை சேமிப்பு செய்த செயலாளர்கள் திடீரென மாற்றம் செய்யப்பட்டால் புதிதாக வரும் செயலாளர்கள் வளர்ந்துள்ள கூட்டுறவுச் சங்கத்தை சீர்கேடு அடையச் செய்ய வாய்ப்புள்ளது. எனவே, செயலாளர்களை பணியிட மாற்றம் செய்யக்கூடாது என தமிழ்நாடு கூட்டுறவு பணியாளர்கள் சங்கம் மாநிலம் முழுவதும் கோரிக்கை வைத்து பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகிறது. மேலும், இந்த அரசாணையை ரத்துசெய்ய நீதிமன்றத்தையும் நாடியுள்ளது.இந்த நிலையில் தேனி மாவட்டத்தில் 10 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் செயலாளர்களாக பணிபுரிவோருக்கு தேனி மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் பணியிட மாறுதல் உத்தரவினை அளித்துள்ளார். இந்த உத்தரவு கூட்டுறவுச் சங்க செயலாளர்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், பணியிட மாற்றம் செய்யப்பட்ட பெரும்பாலான செயலாளர்கள் உத்தரவை பெற மறுத்து நீதிமன்றத்தை நாடமுடிவு செய்துள்ளனர்.இதுகுறித்து தேனி மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் முத்துக்குமரசுவாமியிடம் கேட்டபோது, `` தமிழக அரசின் கொள்கை முடிவு இது. சில கூட்டுறவு சங்கங்களில் முறைகேடு நடந்துள்ளதாக அரசுக்கு தெரியவந்துள்ளது. இதில் கூட்டுறவுச் சங்க செயலாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்படும்போது, புதிதாக பொறுப்பேற்கும் செயலாளர்கள் சங்கங்களின் முறைகேட்டை கண்டுபிடிக்க வாய்ப்புள்ளது. இதனால் இந்த இடமாறுதல் செய்யப்படுகிறது’’ என்றார்.

Related Stories: