திரிசூலக்காளியம்மன் கோயில் ஆடிமாத தீமிதி திருவிழா

உத்திரமேரூர். ஜூலை 23: உத்திரமேரூர் அடுத்த திருப்புலிவனம் கிராமத்தில் அமைந்துள்ள திரிசூலக்காளியம்மன் கோயிலில் தீ மிதி திருவிழா நடந்தது. உத்திரமேரூர் அடுத்த திருப்புலிவனம் கிராமத்தில் அமைந்துள்ள திரிசூலக்காளியம்மன் கோயில் 35ம்  ஆண்டு தீமிதி திருவிழா நடந்தது. இதையொட்டி, நேற்று முன்தினம் காலை காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. முன்னதான அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டது.

தொடர்ந்து கோயில் வளாகத்தில் உலக நன்மை வேண்டி யாக வேள்விகள் நடத்தி, திருவிளக்கு பூஜை நடந்தது இதில் 1008 பெண்கள் கலந்து கொண்டு மாங்கல்ய பாக்கியம், குழந்தை பாக்கியம், லட்சுமி பாக்கியம் மற்றும் சுபநிகழ்ச்சிகள் தடையின்றி நடக்கவும், மாணவிகள் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறுவதற்கும் அம்மனை வழிபட்டனர். இதையடுத்து பக்தர்கள் வேப்பிலை ஆடை அணிந்து கோயிலை சுற்றி வந்து, அம்மனை வழிபட்டும், கோயில் வளாகத்தில் ஊரணிப் பொங்களிட்டு நேர்த்திக்கடன்களை நிறைவேற்றினர்.

அதன்பின் அம்மனுக்கு கூழ்வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. மாலை விரதமிருந்த பக்தர்கள் திருப்புலிவனம் குளக்கரையில் இருந்து புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து கோயில் வளாகத்தில் மூட்டப்பட்டு இருந்த அக்னி குண்டத்தில் தீ மிதித்தனர். பின்னர் ஆன்மிகச் சொற்பொழிவு மற்றும் பட்டிமன்ற நிகழ்ச்சிகள் நடந்தன.விழாவில் கலந்துக்கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் திரிசூலக்காளியம்மன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். விழா ஏற்பாடுகளை விழா குழுவினர்கள் மற்றும் கிராம மக்கள் செய்தனர்.

மதுராந்தகம்: அச்சிறுப்பாக்கம் அருகே மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா நேற்று முன்தினம் நடந்தது.அச்சிறுப்பாக்கம் அடுத்த மதூர் காட்டுக்கரணை கிராமத்தில், உமாபதி மாரியம்மன் திருக்கோயில் உள்ளது. இக்கோயிலில், 27ம் ஆண்டு தீமிதி திருவிழா நேற்று முன்தினம் நடந்தது. விழாவையொட்டி, நேற்று முன்தினம் காலை 6 மணியளவில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனைகள் நடந்தன.இதில், கலந்து கொண்ட பக்தர்கள் பக்தியுடன் தீபாராதணையை வழிபட்டனர். தொடர்ந்து, குளக்கரை பூஜை, அம்மனுக்கு கூழ்வார்த்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதையடுத்து காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் தீ மிதித்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர்.இந்த விழாவில், அச்சிறுப்பாக்கம், மதுராந்தகம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

Related Stories: