மும்முனை போட்டியால் பரபரப்பு தாழக்குடி கூட்டுறவு சங்க தேர்தலில் விறுவிறு வாக்குப்பதிவு அதிரடிப்படை பாதுகாப்புடன் நடந்தது

ஆரல்வாய்மொழி, ஜூலை 23: தாழக்குடி கூட்டுறவு சங்க தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று காலை அதிரடிப்படை பாதுகாப்புடன் நடைபெற்றது.குமரி மாவட்டத்தில் 115 தொடக்க கூட்டுறவு சங்கங்கள், 40 பணியாளர் சிக்கன நாணய சங்கங்கள்,  பால்வள கூட்டுறவு சங்கங்கள், மீனவ கூட்டுறவு சங்கங்கள் உள்ளிட்டவற்றுக்கான தேர்தல் கடந்த ஆண்டு ஏப்ரல் 2ம் தேதி முதல் 23ம் தேதி வரை 4 கட்டமாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. நீதிமன்றத்தில் வழக்குகள் உள்ளிட்ட பிரச்சினை காரணமாக பல கூட்டுறவு சங்கங்களில் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது.தாழக்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திலும் வேட்பு மனு தாக்கலில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதால், தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது. பின்னர் நீதிமன்ற உத்தரவுப்படி, ஜூலை 22ம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதற்கான வேட்பு மனு தாக்கல் ஒரு வாரத்துக்கு முன் நடைபெற்றது. திமுக சார்பில் குமார் என்ற பகவதியப்பன் தலைமையில் 13 பேர், அதிமுக சார்பில் பிரம்மநாயகம் தலைமையில் 11 பேர், அமமுக சார்பில் பகவதிபெருமாள் தலைமையில் 11 பேர் என 35 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதில் திமுகவை சேர்ந்த 2 பேர் தங்கள் வேட்பு மனுவை வாபஸ் பெற்றனர். இதையடுத்து 11 இடங்களுக்கு 33 பேர் களத்தில் இருந்தனர்.  நேற்று காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.இந்த கூட்டுறவு கடன் சங்கத்தில் தாழக்குடி, சீதப்பால், ஈசாந்திமங்கலம், வீரநாராயணமங்கலம், சந்தைவிளை உள்பட சுற்று வட்டார கிராமங்களில் இருந்து சுமார் 2500 உறுப்பினர்கள் உள்ளனர். திமுக, அதிமுக, அமமுக என 3 கட்சிகளை சேர்ந்தவர்களும் களத்தில் இருந்ததால், இந்த தேர்தல் பரபரப்பாக நடைபெற்றது. வாக்குப்பதிவு தொடங்கிய நேரத்தில் இருந்து, வாக்களிப்பதற்காக உறுப்பினர்கள் ஆர்வமுடன் வந்தனர். பிரச்சினை ஏற்படலாம் என்ற தகவல் காரணமாக, ஏ.எஸ்.பி. ஜவகர் தலைமையில் அதிரடிப்படை உள்பட 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். உறுப்பினர் அடையாள அட்டை வைத்திருந்தவர்கள் மட்டும் வாக்கு சாவடிக்குள் அனுமதிக்கப்பட்டனர். ஆண்கள், பெண்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். முதியவர்கள், ஊனமுற்றவர்கள் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. முதியவர்கள் சிலரை அரசியல் கட்சியினர் வாக்குசாவடிக்குள் அழைத்து செல்ல முயன்றனர். ஆனால் போலீசார் அரசியல் கட்சியினரை உள்ளே அனுமதிக்க வில்லை. வயதானவர்களை போலீசாரே முன்னின்று வாக்குசாவடிக்குள் அழைத்து சென்று வாக்களிக்க வைத்தனர். சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தலை மிஞ்சும் அளவுக்கு வாக்குப்பதிவு விறுவிறுப்பாக இருந்தது. வாக்குசாவடியில் இருந்து 100 மீட்டருக்குள் அரசியல் கட்சியினர் நிற்க வேண்டாம் என கூறி அடிக்கடி போலீசார் எச்சரித்து அப்புறப்படுத்தினர். இதனால் அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களுக்கும், போலீசாருக்கும் அவ்வப்போது வாக்குவாதம் ஏற்பட்டது.

அதிமுக மறியல்

ஆரல்வாய்மொழி இன்ஸ்பெக்டர் சுகதேவி, ஒருமையில் பேசியதாக கூறி அதிமுகவினர் திடீரென தாழக்குடி சாலையில் மறியலில் அமர்ந்தனர். இதனால் பரபரப்பு அதிகரித்தது. உடனடியாக அதிமுக நிர்வாகிகள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி, அதிமுகவினரை சமாதானம் செய்தனர். மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 1960 வாக்குகள் பதிவாகி இருந்தன. இதில் ஆண்கள் 1068, பெண்கள் 892. இதன் வாக்கு எண்ணிக்கை இன்று நடக்கிறது. இதையொட்டியும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

Related Stories: