திருப்பூர், கோவை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் குமரியில் பதுங்கி இருந்த கொள்ளை கும்பல் சிக்கியது வீடுகளில் கைவரிசை காட்ட திட்டம்

திங்கள்சந்தை, ஜூலை 23 :

குமரி மாவட்டத்தில் வீடுகளில் கொள்ளை சம்பவங்கள் தொடர் கதையாகி உள்ளன. பூட்டி இருக்கும் வீடுகளை நோட்டமிட்டு பணம், நகைகளை அள்ளி சென்றுள்ளனர். நாகர்கோவில், கருங்கல், தக்கலை, மார்த்தாண்டம், குலசேகரம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ச்சியாக கொள்ளை சம்பவங்கள் நடந்துள்ளன. இந்த கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுகிறவர்களை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில் திங்கள்சந்தை அருகே ஒரு வீட்டில் சந்தேகத்துக்கிடமான வகையில் சிலர் தங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் வந்தது. அதன் பேரில் தனிப்படை போலீசார் ரகசியமாக அந்த வீட்டை நோட்டமிட்டனர்.நேற்று முன் தினம் நள்ளிரவில் திடீரென போலீசார் அந்த வீட்டுக்குள் நுழைந்தனர். அப்போது அந்த வீட்டில் 5 பேர் இருந்தனர். போலீசாரை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த கும்பல், போலீசாரை தாக்கி விட்டு அங்கிருந்து தப்ப முயன்றனர். ஆனால் போலீசார் அவர்களை சுற்றி வளைத்து பிடித்து, காவல் நிலையம் கொண்டு வந்தனர். அவர்களிடம் நடந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தன. பிடிபட்ட 5 பேரில் 2 பேர் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள்  ஆவர். 3 பேர் கோவை மாவட்டத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் மீது கொலை, கொள்ளை தொடர்பான வழக்குகள் உள்ளன. திருப்பூரை சேர்ந்த 2 பேரை ஏற்கனவே நாமக்கல் மாவட்ட போலீசார் தேடி வந்துள்ளனர் என்பதும், கோவையை சேர்ந்த 3 பேருக்கு பல கொள்ளை வழக்குகளில் தொடர்பு இருப்பதும் தெரிய வந்தது. இவர்கள் 5 பேரும் திங்கள்சந்தை அருகே வாடகை வீட்டில் வியாபாரி என கூறி குடி அமர்ந்தனர்.  குமரி மாவட்டத்தில் வீடுகளை நோட்டமிட்டு கைவரிசை காட்ட திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.இவர்கள் மீது ஏற்கனவே நாமக்கல், கோவை, திருப்பூரில் வழக்குகள் உள்ளதால், இவர்களை அங்குள்ள போலீசாரிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளனர். பின்னர் காவலில் எடுத்து குமரி மாவட்ட போலீசார் விசாரணை நடத்துவார்கள். அதன் பின்னர் தான் இவர்கள் குமரி மாவட்டத்தில் கைவரிசை காட்டினார்களா? என்பது பற்றிய விவரம் தெரிய வரும் என போலீசார் கூறி உள்ளனர். இதே போல் வெளி மாவட்டத்தை சேர்ந்த கொள்ளை கும்பல்கள் ஆங்காங்கே குமரி மாவட்டத்துக்குள் ஊடுருவி இருப்பதாக தகவல் வந்துள்ளதால், போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

Related Stories: