கடல்சீற்றம், சூறைக்காற்று சின்னமுட்டம் மீனவர்கள் 4வது நாளாக மீன்பிடிக்க செல்லவில்லை மீன் விலை கிடுகிடு உயர்வு

கன்னியாகுமரி, ஜூலை 23: கன்னியாகுமரி சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. தினமும் அதிகாலை 4 மணிக்கு ஆழ்கடலுக்கு செல்லும் இவர்கள் பகல் முழுவதும் மீன்பிடித்துக்கொண்டு இரவு 10 மணிக்குள் கரை திரும்ப வேண்டும் என்ற கட்டுப்பாடு உள்ளது. இந்தநிலையில் தற்போது கடலில் சூறைகாற்று வீசுவதால் மீன்பிடி தொழில் பாதிப்படைந்துள்ளது.

கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை எச்சரித்துள்ளது. இதையடுத்து சின்னமுட்டம் விசைப்படகு மீனவர்கள் கடந்த 3 நாட்களாக மீன்பிடிக்க செல்லவில்லை. இந்த நிலையில் நேற்று காலையும் கடல் சீற்றத்துடன் காணப்பட்டதால் 4வது நாளாக நேற்றும் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. விசைப்படகுகள் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.இதனால் மீனவர்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அதோடு மீன் பிரியர்களுக்கும் மீன் உணவு கிடைக்காத நிலை உள்ளது. சமீப காலமாக மீன்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ ₹250 என விற்ற மீன்கள் தற்போது ₹600 வரை விற்கப்படுகிறது. சாளை மீன் 10 ரூபாய்க்கு 2 அல்லது 3 என விற்கப்படுகிறது. கடலில் ஏற்பட்டுள்ள சூறை காற்று மீனவர்களை மட்டுமல்ல மீன் உணவு பிரியர்களையும் கடுமையாக பாதித்துள்ளது.

Related Stories: