100 கிலோவிற்கு மேல் கழிவுகள் சேரும் நிறுவனங்களிடம் மாநகராட்சி குப்பைகள் பெறாது கையாள்வது குறித்து விழிப்புணர்வு

நாகர்கோவில், ஜூலை 23: நாகர்கோவிலில் 100 கிலோவிற்கு மேல் குப்பைகள் உற்பத்தி செய்யும் நிறுவனங்களிடம் மாநகராட்சி இனி குப்பைகள் பெறாது என அறிவித்துள்ளது. நாகர்கோவில் மாநகராட்சியில் தற்போது, தினசரி 110 டன் முதல் 120 டன் வரை குப்பைகள் சேகரிக்கப்பட்டு வருகிறது. இந்த குப்பைகள் வலம்புரிவிளை கிடங்கில் ெகாட்டப்பட்டு வருகிறது. தற்போது இங்கு ஒட்டுமொத்த குப்பைகள் சேருவதை தடுத்து 9 மண்டலங்களில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் மூலம் மக்கும் குப்பை, மக்காத குப்பை என சேகரித்து, அவற்றை உரமாக்கி விற்பனை செய்ய மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்நிலையில், 100 கிலோவிற்கு மேல் குப்பைகளை உற்பத்தி செய்யும், பெருவணிக நிறுவனங்கள், உணவு விடுதிகள், கல்வி நிலையங்கள், பெரு மருத்துவமனைகள், அடுக்குமாடி குடியிருப்புகள், தொழிற்சாலைகள், ஒரு ஏக்கருக்கு மேல் நிலம் உள்ளவர்களை கண்டறிந்து, அவர்களிடம், மாநகராட்சி குப்பைகளை பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி நாகர்கோவில் மாநகராட்சியில் 39 வணிக நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகள் இனம் கண்டறியப்பட்டுள்ளன. நேற்று அதன் பிரதிநிதிகளுக்கு நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்தில், அவர்களது குப்பைகளை எவ்வாறு கையாள்வது என்பது பற்றி மாநகர் நல அலுவலர் கின்சால் விழிப்புணர்வு பயிற்சி அளித்தார். அப்போது, மக்கும் குப்பைகளை தனியாக உரக்கிடங்கு உருவாக்கி, அவர்களே அதனை உரமாக்கி விற்பனை செய்யலாம். மரத்தில் இருந்து விழும் இலைக்கழிவுகள் போன்றவற்றை அப்படி கிடங்கில் போடாமல், அதனை சிறுசிறு துண்டுகளாக்கி உணவு கழிவுகளுடன் மக்க செய்ய வேண்டும். மக்கிய உரங்களை அவர்கள் விற்பனை செய்யலாம். மக்காத குப்பைகளை தனியாக சேகரித்து, வாரந்தோறும் குறிப்பிட்ட நாட்களில் மாநகராட்சியிடம் வழங்கலாம். இதற்கு மாநகராட்சிக்கு கட்டணம் செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

கட்டிட கழிவு கொட்டினால் ₹5 ஆயிரம் அபராதம்

ஒரு நபருக்கு 400 கிராம் வீதம் குப்பைகள் சேகரம் ஆகும் என்ற கணக்கீட்டின் படி நாகர்கோவில் மாநகராட்சியில், 100 டன்னிற்கும் குறைவாகவே குப்பைகள் சேகரம் ஆக வேண்டும். ஆனால், கழிவுநீரோடைகளில் அள்ளப்படும் மண், கட்டிட கழிவுகள் காரணமாக 120 டன் வரை குப்பைகள் தினசரி சேகரம் ஆகிறது. கட்டிட கழிவுகளை கட்டிட உரிமையாளரே தனது சொந்த பொறுப்பில் மாற்ற வேண்டும். தெருக்கள் மற்றும் சாலைகளில் கட்டிட கழிவுகளை கொட்டக்கூடாது. தற்போது மாநகராட்சியில் இதுபோன்று கட்டிட கழிவுகளை தெருக்கள் மற்றும் சாலைகளில்  கொட்டி செல்வோருக்கு ₹5 ஆயிரம் அபராதமும், குப்பைகளை அவர்களே அள்ளிச் செல்லவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Related Stories: