மணல் திருடினால் குண்டர் சட்டம் தேனி எஸ்.பி எச்சரிக்கை

தேனி, ஜூலை 23: தேனி மாவட்டத்தில் மணல் திருடும் கும்பல் மீது குண்டர்் தடுப்பு சட்டம் பாயும் என தேனி எஸ்.பி, பாஸ்கரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: முல்லைப் பெரியாற்றில் மணல் திருட்டில் ஈடுபட்ட கோட்டூரை சேர்ந்த கோபால்(28) என்பவரை நேற்று இரவு வீரபாண்டி போலீசார் கைது செய்தனர். அவர் பயன்படுத்திய டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது. அதேபோல் ஏத்தகோயில், போடிதாசன்பட்டி விலக்கு அருகே அனுமதியின்றி செம்மண் திருடிய வைகை புதுாரை சேர்ந்த விருமநாதன்(42) என்பவரையும் கைது செய்து, டிப்பர் லாரி பறிமுதல் செய்யப்பட்டது. கடந்த 2019ம் ஆண்டு ஜனவரி முதல் தேதி  முதல் ஜூலை 21ம் தேதி வரை கனிமவளம் திருட்டு தொடர்பாக 149 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 169 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 62 டிராக்டர், 15 டிப்பர் லாரிகள், 5 ஜேசிபி இயந்திரங்கள், 60 மாட்டு வண்டிகள், 22 டூவீலர் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் உட்பட மெத்தம் 164 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கடந்த 21 நாட்களில் மட்டும்  23 மணல் திருட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து  28 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மணல் திருட்டு வழக்கில் ஈடுபடுவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க அரசு அறிவுறுத்தி உள்ளது. எனவே, இனிமேல் மணல் திருட்டில் ஈடுபட்டால் இனிமேல் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள்.

 இவ்வாறு கூறியுள்ளார்.

Related Stories: