மின்கட்டண பாக்கியை அபராதத்துடன் செலுத்திய அவலம்

காரைக்குடி, ஜூலை 23: மின்சார துறைக்கு பல லட்சம் வரை மின் கட்டண பாக்கி இருந்ததால், பஞ்சாயத்துக்கு உட்பட்ட கட்டிடங்களுக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. பின்னர் அபராதத்துடன் மின் கட்டணம் செலுத்தியால் மின் இணைப்பு தரப்பட்டுள்ளது. காரைக்குடி அருகே சங்கராபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட 15 வார்டுகளில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. 17 குக்கிராமங்கள் உள்ளன. தற்போதைய கணக்கெடுப்பின்படி 60 ஆயிரத்து 265 பேர் உள்ளனர். குடிநீர், வீட்டு வரி, கட்டிட அனுமதியில் ஆண்டுக்கு ரூ.1 கோடியே 20 லட்சம் வரை வருமானம் வருகிறது. ஆவின், அரசு மருத்துவமனை, பவர் கிரிட், அரசு போக்குவரத்து பணிமனை, பள்ளி, கல்லூரி என பலமுக்கிய நிறுவனங்கள் உள்ளன. உள்ளாட்சி தேர்தல் நடத்தாததால் தனி அதிகாரிகள் கட்டுப்பாட்டில் கடந்த சில ஆண்டுகளாக உள்ளது. தனி அதிகாரிகள் கண்டு கொள்ளாததால் அடிப்படை வசதிகள் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளன. கடந்த நவம்பர் முதல் மின் கட்டணம் ரூ 60 லட்சத்துக்கு மேல் செலுத்தாததால் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஊராட்சி அலுவலகம், சமுதாயக் கூட்டம் உள்பட பல்வேறு கட்டிடங்களுக்கு மின் இணைப்பை மின்சார துறை துண்டித்ததாக கூறப்படுகிறது. பின்னர் அபராதத்துடன் மின் கட்டணம் செலுத்தியதும் மின் இணைப்பு தரப்பட்டுள்ளது. பணம் இருக்கும் நிலையில் மக்கள் வரிப்பணத்தை வீண் செய்து அபராதத்துடன் கட்டியதற்கு சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சமூக ஆர்வலர் ஆதிஜெகன்நாதன் கூறுகையில், பல்வேறு வகையில் வளர்ச்சி அடைந்து வரும் இப்பகுதி இன்னும் கிராம ஊராட்சி நிலையிலேயே உள்ளதால் போதிய அடிப்படை வசதிகள் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இப்பகுதியை காரைக்குடி நகராட்சியுடன் இணைக்க வேண்டும் அல்லது பேரூராட்சியாக மாற்ற வேண்டும் என கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்னரே தீர்மானம் போட்டு அனுப்பியும் கண்டுகொள்ளாத நிலையே உள்ளது. உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாததால் தனி அதிகாரிகள் மக்கள் தேவைகளை பூர்த்தி செய்வதில் அக்கறை காட்டுவது இல்லை. சாலைகள் அனைத்தும் குண்டும், குழியுமாக உள்ளது. மின்சார துறைக்கு கடந்த நவம்பர் முதல் தற்போது வரை ரூ.60 லட்சம் வரை கட்டணம் செலுத்தாமல் உள்ளனர். ஊராட்சி பணம் இருந்தும் ஏன் கட்டாமல் காலம் தாழ்த்தினார்கள் என தெரியவில்லை. இதனால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட பின்னர் மக்கள் வரிப்பணத்தை வீண் செய்து வட்டியுடன் ரூ.25 லட்சம் வரை செலுத்தியுள்ளனர் என்றார்.

Related Stories: