காளையார்கோவில் சுடுகாட்டிலும் சுகாதாரம் இல்லை

காளையார்கோவில், ஜூலை 23: காளையார்கோவிலில் உள்ள ஒழுகுளத்து கண்மாயில் கொட்டப்படும் குப்பைக்கழிவுகளால் அப்பகுதி மக்களுக்கு நோய்பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.காளையார்கோவிலில் உள்ள ஒழுகுளத்து கண்மாய்  நகர்புறத்திற்கு மிக அருகே உள்ளது. இக்கண்மாயைச் சுற்றிலும் வீடுகள் அதிகளவில் உள்ளன. மேலும் இப்பகுதியில் சுதந்திரப் போராட்ட தியாகி முத்துவடுகநாதத் தேவர் நினைவிடமும் உள்ளது. மேலும் இப்பகுதியில் தான் சுடுகாடும் உள்ளது. ஆனால். சுடுகாட்டிற்கு கூட செல்லமுடியாத அளவிற்கு  இக்கண்மாயில் காளையார்கோவில் பகுதியில் உள்ள குப்பைகள் மற்றும்  பிளாஸ்டிக் கழிவுகள், எச்சில் இலைகள்  கொட்டப்படுகின்றன. மேலும் குப்பையில்  தீ வைக்கப்படுவதால் அப்பகுதி துர்நாற்றத்தாலும், புகை நெடியாலும் சுற்றுச்சூழல் மாசு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சுடுகாட்டிற்கு பிணத்தை கொண்டு செல்ல முடியாத அளவிற்கு துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் மருத்துவமனைகளில் இருந்து கொட்டப்படும் மருத்துவக்கழிவுகள், மருந்து பாட்டில்கள், சிரிஞ்சுகளால் தொற்றுநோய் அபாயமும் ஏற்பட்டுள்ளது. பல மாதங்களாக குப்பையை அழிக்காமல் விட்டதால் ஏற்படும் துர்நாற்றத்தால் அப்பகுதி மக்கள் நரக வேதனையடைந்து வருகின்றனர்.இதுகுறித்து சமூக ஆர்வலர் காமராஜ் கூறுகையில், ``காளையார்கோவிலில் உள்ள ஒழுகுளத்து கண்மாய் 52 ஏக்கருக்கு மேல் உள்ள பெரியகண்மாயாகும். இக்கண்மாயைச் சுற்றி சில ஆண்டுகளுக்கு முன்பு 40 ஏக்கருக்கும் மேல் நெல் விவசாயம் செய்யப்பட்டு வந்தது. ஆனால், தற்போது விளைநிலங்கள் அனைத்தும் வீட்டுமனைகளாக மாறிவிட்டதாலும் கண்மாயைச் சுற்றியுள்ள வீடுகளில் இருந்து கழிவுநீர் மற்றும் குப்பைகளை கொட்டி வருவதால்  கண்மாய்க்கு  வரும் நீர்வரத்துக் கால்வாய்கள் அடைபட்டு நீர்வரத்து முற்றிலும் நின்றுபோனது.

 மேலும் கண்மாயைச் சுற்றி கருவேல மரங்கள் அடர்த்தியாக  இருப்பதால் இரவு நேரங்களில் விஷப்பூச்சிகள் வீடுகளில் நுழைந்து விடுவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். ஊராட்சி ஒன்றியத்தில் இருந்து திட்டக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் பிளாஸ்டிக் பொருட்களை பிரித்தெடுத்து மற்றக் கழிவுகளை அகற்றுவதற்கு இடங்கள் ஒதுக்கப்பட்டு எந்தப் பயன்பாடும் இல்லாமல் கிடக்கிறது. சிறு மழைபெய்தால் கூட குப்பைகளில் ஏற்படும் துர்நாற்றத்தால் சுவாசிக்க முடியாத நிலை உள்ளது. குறிப்பாக, குப்பைக் கிடங்கின் மிக அருகில்தான் காளையார்கோவில் பகுதிக்கு செல்லும் குடிநீர் போர்வெல் உள்ளது. அங்கிருந்து மேல்நிலைத் தொட்டிமூலம் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. கண்மாய் என்பதால் மழைக்காலங்களில் குப்பைக்கிடங்களில் தேங்கும் தண்ணீர் போர்வெல்லில் இறங்க வாய்ப்புள்ளது. இந்த நீரை தான் காளையார்கோவில் மக்கள் குடிக்கும் நிலை உள்ளது. எனவே, குப்பைகொட்டுவதற்கும், அவற்றை முறையாக அழிப்பதற்கும்  சிவகங்கை மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அததுடன் சுகாதாரத்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இப்பகுதிகளில் மருந்து தெளிப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்’’ என்று கூறினார்.

Related Stories: