குடிநீர் வழங்கக் கோரி மணக்குடி மக்கள் குடங்களுடன் கலெக்டர் அலுவலகம் முற்றுகை

ராமநாதபுரம், ஜூலை 23: ஆர்.எஸ்.மங்கலம் அருகே மணக்குடி கிராமத்தை சேர்ந்த ஏராளமான பெண்கள் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். மணக்குடியில் 300க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. கடந்த 3 ஆண்டுகளாக காவிரி கூட்டுக் குடிநீர் வரவில்லை. எந்த தண்ணீர் வசதியும் இல்லாமல் வாழ்ந்து வருகிறோம். ஊரணி, கிணறுகள், போர்வெல்கள் வறண்டு விட்டன. பள்ளிக்கு குழந்தைகளை குளிக்காமலும், ஆடைகளைத் துவைக்காமலும் அனுப்பும் அவல நிலையில் உள்ளோம். தண்ணீர் குடம் ரூ.10 என விற்கின்றனர். குடிக்க பிற தேவைக்கு விலைக்கு வாங்கி குடிக்கும் நிலையில் கிராம மக்கள் இல்லை. விவசாயம் இல்லாத நிலையில் வாழ்வாதாரமே கேள்விக்குறியாக உள்ளது. தண்ணீர் இல்லாத நிலையில் கால்நடைகளை வளர்க்க முடியாமல் உள்ளோம். குடிநீர் கேட்டு ஒன்றிய அலுவலகத்தில் பலமுறை மனு அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வில்லை. ஆகவே காலிக்குடங்களுடன் கலெக்டரிடம்  தண்ணீர் கேட்கிறோம் என தெரிவித்தனர். அதேபோல, பரமக்குடி அருகே பொட்டிதட்டி காலனியைச் சேர்ந்த ஏராளமான பெண்கள், ஆண்கள் காலிக்குடங்களுடன் வந்தனர். பொட்டிதட்டி பகுதியில் உள்ள காலனியில் 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. காவிரிக் கூட்டுக்குடிநீர் குழாய்களில் கடந்த சில ஆண்டுகளாகவே தண்ணீர் இல்லை. கிராமத்தில் உள்ள  3 போர்வெல் கிணறுகளும்   தூர்ந்து போய் விட்டன.

மழைநீர் சேமிப்பு அமைப்பதாகக் கூறி போர்வெல்களை சேதப்படுத்தி விட்டனர். இதனால், குடிநீர் உள்ளிட்ட அனைத்து தேவைகளுக்கும் விலைக்கே தண்ணீரை வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பல கிலோ மீட்டர் தூரம் அலைந்தாலும் குடிநீர் கிடைக்கவில்லை என மனு அளித்துள்ளனர்.

கடந்த சில மாதங்களாக திங்கள் கிழமைகளில் நடக்கும் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாவட்டத்தில பல பகுதிகளிலிருந்து குடிநீர் கேட்டு ஏராளமான கிராமத்தினர் வந்து கொண்டே இருக்கின்றனர். பல கிராமங்களிலிருந்து குடிநீருக்காக பல முறை மனு அளித்துள்ளதாக தெரிவிக்கின்றனர். ஆட்சியாளர்களும், மாவட்ட நிர்வாகமும் மாவட்டத்தில குடிநீர் பிரச்னை அவ்வளவாக இல்லை. ஒரு சில இடங்களில் இருந்தாலும் தண்ணீர் லாரி மூலம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்து வருகின்றனர். அதிகாரிகள் தரப்பில் சொல்லப்படும் தகவல்கள்படி கிராமங்களில் தண்ணீர் வழங்கப்பட்டிருந்தால் மாவட்டத்தில் தண்ணீர் கேட்டு வரும் மனுக்கள் குறைந்திருக்க வேண்டும். ஒவ்வொரு வாரமும் மனுக்கள் வந்துக்கொண்டுதான் இருக்கிறது. மாவட்டத்தில் தண்ணீர் பிரச்னையை தீர்க்க மாவட்ட நிர்வாகம் தனிகுழு அமைத்து நேரடி ஆய்வு நடத்த வேண்டும் என்பதே கிராமத்தினரின் வேண்டுகோளாக உள்ளது.பெண்களிடம் நகை பறிக்கும்

ஹெல்மெட் கொள்ளையர்கள்

Related Stories: