வேதாளை பகுதியில் ‘பிளாக்கில்’ மது விற்பனை ஜோர்

மண்டபம், ஜூலை 23: வேதாளை ஊராட்சி பகுதியில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேதாளை பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உள்ள மதுபான கடையை நீதிமன்றம் அகற்ற உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் உள்ள அரசு மதுபான கடை அகற்றப்பட்டது. இதில் வேதாளை பேருந்து நிறுத்த பகுதியில் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் இருந்த இரண்டு மதுபான கடைகளும் அகற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் வேதாளை ஊராட்சியில் குடியிருப்பு பகுதியில் பல்வேறு இடங்களில் இரவு பகலாக சில மர்ம நபர்கள் சட்ட விரோதமாகவும், கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை செய்து வருகின்றனர். இதனால் சிறுவர்களில் இருந்து பெரியவர்கள் வரை இரவு பகலாக மது குடிக்கும் பழகத்திற்கு அடிமையாகும் அவல நிலையுள்ளது. மேலும் குடித்து விட்டு இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் அதிக வேகத்தில் செல்வதால், விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படும் நிலையுள்ளது. இதனால் போலீசார் வேதாளை பகுதியில் அனுமதியின்றி மதுபானம் விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேதாளை பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வேதாளை பகுதியை சேர்ந்தவர்கள் கூறும்போது, வேதாளை பகுதியில் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் இருந்த மதுபான கடை அகற்றப்பட்டதில் இருந்து சில மர்ம நபர்கள் உச்சிப்பு பாம்பன் பகுதியில் உள்ள மதுபான கடைகளில் மொத்தமாக மதுபாட்டில்கள் வாங்கி வந்து வேதாளையில் பல்வேறு பகுதியில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர். இதனால் வேதாளை பகுதியில் பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டு வருகிறது. மாவட்ட காவல் துறையினர் வேதாளை பகுதியில் பிளாக்கில் மதுபானம் விற்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.

Related Stories: