குறைதீர்க்கும் கூட்டத்திற்கு வரும் பொதுமக்கள் வாரந்தோறும் அலைக்கழிப்பு

ராமநாதபுரம், ஜூலை 23:  ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு அளிக்க வந்தவர்கள் அலைக்கழிப்பு செய்ததால், வேதனையுடன் திரும்பி செல்கின்றனர். வாரந்தோறும் திங்கள் கிழமை கலெக்டர் தலைமையில், மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும். இக்கூட்டத்திற்கு மாவட்டத்தில் பல பகுதிகளில் உள்ள பொதுமக்கள் தங்களின் தனிப்பட்ட பிரச்னைகள், குடிநீர், சாலை, மின்சாரம் போன்ற பொதுவான பிரச்னைகளை கலெக்டரிடத்தில் நேரடியாக மனு அளித்து வருகின்றனர். மனு அளிக்க வருபவர்கள் கூட்ட அரங்க வளாகத்தில் அலுவலர்கள் மனு அளித்து அனுமதி சீட்டு பெற வேண்டும். பின்னர் கலெக்டரிடம் மனுவை அளித்து குறைகளை தெரிவிக்க வேண்டும். நேற்று நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் மனுக்களுக்கான அனுமதி சீட்டு வழங்க தாமதமானதால் ஏராளமானவர்கள் நீண்நேரம் காதிருந்தனர். மாவட்டத்தில் தொலை தூரத்திலிருந்து வருபவர்கள் அனுமதி சீட்டு பெறவே பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய அவல நிலை உள்ளது. கடந்த வாரங்களில் அலுவலர்கள் மனுக்களை பெற்று அனுமதி சீட்டை சம்பந்தப்பட்டவர்களின் பெயரை அழைத்து வழங்கி வந்தனர். இந்நிலையில் நேற்று நடந்த கூட்டத்தில் அருகில் உள்ள இ.சேவை மையத்தில் வழங்கியதால் ஏராளமானோர் நீண்ட நேரம் காத்திருந்தனர். மேலும் இ.சேவை மையத்திற்கு வந்த பொதுமக்கள் பாதிப்படைந்தனர். மனு அளிக்க வந்தவர்கள் கூறுகையில், கடலாடி பகுதியிலிருந்து மனு அளிக்க வந்துள்ளோம். நீண்டநேரம் காத்திருக்க முடியவில்லை. அதிகாலை நேரத்தில் புறப்படுவதால் காலை உணவு சாப்பிடாமல் வருகின்றனர். கூட்ட நெரிசலில் வயதானவர்கள், பெண்கள் மயங்கி விழுகின்றனர். கைக்குழந்தைகளுடன் வரும் பெண்கள்  மிகவும் சிரமப்படுகின்றனர். 4 சட்டமன்ற தொகுதி உள்ள மாவட்டத்தில் வாரத்தில் இரண்டு நாட்கள் குறைதீர் கூட்டம் நடத்தலாம். மேலும் தொகுதி வாரியாக சம்பந்தப்பட்ட தாலுகா அலுவலகங்களில் நடத்தினால் பொதுமக்கள் நீண்டதூரம் அலைய வேண்டியதில்லை. கலெக்டர் தான் குறைதீர்க்க மனு அளிக்க வரும் மக்களின் நிலையை கருதி தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Related Stories: