காவிரி குடிநீர் கிடைக்காததால் கலெக்டர் அலுவலகத்தில் குடியேற மக்கள் முடிவு

சாயல்குடி, ஜூலை 23: முதுகுளத்தூர் அருகே சாம்பக்குளம் ஊராட்சிக்கு குடிநீர் வழங்க கிராமமக்கள் சார்பில் பலமுறை கோரிக்கை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்து சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர்.

முதுகுளத்தூர் ஒன்றியம் சாம்பக்குளம் ஊராட்சியில் சாம்பக்குளம், பொழிகால், இந்திரா நகர் காலனி, அண்ணா நகர் காலனி, கேளல், கே.ஆர்.பட்டிணம் ஆகிய கிராமங்கள் உள்ளன. பஞ்சாயத்தில் 1000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன, மக்கள் விவசாய கூலி வேலை, கட்டிட வேலைக்கு சென்று வருகின்றனர். இங்கு கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக குடிநீர் விநியோகம் இன்றி கிராமமக்கள் அவதிப்பட்டு வருவதாக கூறுகின்றனர். இங்கு அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணற்று தண்ணீர் உப்பு தண்ணீராக இருப்பதால், கழிவறைக்கு கூட பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதால், குடியிருப்பு பகுதிக்கு குடிநீர் கேட்டு கிராமமக்கள் சார்பில் முதுகுளத்தூர் யூனியன் அலுவலகம், ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் மூன்று முறை புகார் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்க வில்லை. இதனால் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, குடியேர போவதாக கிராம மக்கள் சுவரொட்டிகளை ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து சாம்பக்குளம் மக்கள் கூறும்போது, பெருங்கருணை நீர்த்தேக்க தொட்டியின் மூலம் சாம்பக்குளம் பகுதிக்கு தண்ணீர் வழங்கப்பட்டு வந்தது. கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக இப்பகுதிக்கு தண்ணீர் முறையாக வருவது கிடையாது. மனு அளித்தால் அதிகாரிகள் வந்து பார்வையிட்டு செல்வார்கள், அதன் பிறகு  ஒரு சில நாட்கள் மட்டும் தண்ணீர் திறந்து விடுவார்கள். தொடர்ச்சியாக வராது. கடந்த ஒரு மாதமாக தண்ணீர் வரவில்லை. ஆனால் தனியார் டிராக்டர்களுக்கு மட்டும் தண்ணீர் வழங்குகின்றனர்.

தண்ணீரின்றி இப்பகுதி மக்கள், பக்கத்து கிராமமான உடைகுளம் சாலையோரம் செல்லும் காவிரி கூட்டு குடிநீர் கசிவில் இருந்து தொட்டியிலிருந்து தண்ணீர் எடுத்து வருகிறோம். அதனை அக்கிராம மக்கள் பிடித்தது போக மீதமுள்ள தண்ணீரை பிடித்து வருகிறோம். பகலில் கூட்டம் அதிகமாக இருப்பதால் இரவில் தண்ணீர் எடுத்து வருகிறோம். செல்லும் வழியில் உள்ள முதுகுளத்தூர்-பரமக்குடி சாலையில் அடிக்கடி செல்லும் வாகனங்களால் விபத்து ஏற்பட்டு வருகிறது.

உயிர் பயத்துடன் தள்ளுவண்டிகளில் தண்ணீர் எடுத்து வருகிறோம். தண்ணீர் எடுக்க சென்றால் கூலி வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால் குடும்பம் வறுமையில் வாடி வருகிறது. பள்ளிக்கு மாணவர்கள் செல்லும் போது புத்தக பையுடன் குடங்களையும் எடுத்து செல்கின்றனர். பள்ளி முடிந்து தண்ணீர் குடங்களுடன் வருவதால், வீட்டு பாடம் படிப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. இந்நிலையில் கிராம மக்களுக்கு தண்ணீர் வழங்காமல் அரசு அதிகாரிகள் வேடிக்கை பார்த்து வருகின்றனர். இதனை கண்டித்து கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, தண்ணீர் வழங்கும் வரை கலெக்டர் அலுவலகத்தில் குடியேற போவதாக மக்கள் தெரிவித்தனர். மேலும் சாம்பக்குளம் பஞ்சாயத்துக்கு பெருங்கருணை நீர்த்தேக்க தொட்டியிலிருந்து தனியாக குழாய் அமைத்து காவிரி கூட்டு குடிநீர் வழங்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

Related Stories: