மினி பஸ்களில் கூடுதல் கட்டணம் நுகர்வோர் உரிமை கழகம் குற்றச்சாட்டு

பரமக்குடி, ஜூலை 23: பரமக்குடி நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் செயல்பட்டு வரும் மினி பேருந்துகளில் நிர்ணயம் செய்துள்ள கட்டணத்தை விட அதிகமாக பணம்  வசூல் செய்யப்பட்டு வருகிறது. உடன் நடவடிக்கை எடுக்க  நுகர்வோர் உரிமை பாதுகாப்பு கழகம் கோரிக்கை விடுத்துள்ளது. பரமக்குடி நுகர்வோர் உரிமை பாதுகாப்பு கழகத்தின் பொதுக்குழு கூட்டம் நேற்று தலைவர் அரவிந்தன் தலைமையில் நடந்தது. செயலாளர் முகமது சபீக் வரவேற்றார். துணைத் தலைவர் ராமமூர்த்தி, இணைச்செயலாளர் அய்யாத்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் பரமக்குடி நகர் மற்றும் புறநகர் பகுதியில் இயங்கி வரும் மினி பேருந்துகள் குறைந்த பட்ச கட்டணம் ரூ.3 பதிலாக 7 ரூபாய் வசூல் செய்து வருகின்றனர். இதுகுறித்து வட்டார போக்குவரத்து அலுவலருக்கு புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. ஆகையால் இதுகுறித்து நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு செய்யப்பட்டது. கிளை நூலகம் இடிந்து விட்டதால் புத்தகங்கள் குப்பைபோல் குவித்து வைக்கப்பட்டுள்ளது. ஆகையால், வசதியான இடத்தை தேர்வு செய்து தற்காலிகமாக செயல்படவும், நிரந்தரமாக கட்டிடம் கட்ட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும். தபால் நிலையத்திற்கு அதன் சொந்த இடத்தில் கட்டிடம் கட்ட வேண்டும். சென்னை-ரமேஸ்வரம் இடையே பகல் நேர ரயில் இயக்க வேண்டும். தென் மாவட்டங்களை தொடர்ந்து புறக்கணிக்கும் ரயில் நிர்வாகத்தை கண்டித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இறுதியில் பொருளாளர் வெங்கடேசன் நன்றி கூறினார்.

Related Stories: