நிலத்தடி நீரை விற்க கூடாது தண்ணீர் லாரிகளை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டம்

உடுமலை, ஜூலை 23: உடுமலை அடுத்துள்ள மடத்துக்குளம் தாலூகாவில் செங்கழனிப்புதூர் எனும் கிராமம் உள்ளது. இதில் 150 குடும்பங்கள் வசித்து வருகின்றன. மேலும் ஏராளமான விளைநிலங்கள் உள்ளன. இவற்றில் நெல், வாழை, தென்னை பயிரிட்டுள்ளனர். சமீப காலமாக மழை இன்மையால் கடும் வறட்சி நிலவி வருகிறது. இதனால் விவசாயிகள் பயிர்களை காப்பாற்ற முடியாமல் தவித்து வந்தனர்.இந்நிலையில், செங்கழனிபுதூரில் உள்ள தனியார் தோட்டம் ஒன்றில் இருந்து வணிக நோக்கில் தினமும் 50 லாரிகளில் கிணற்று நீர் எடுத்து செல்லப்பட்டு வந்தது. இதனால் அக்கம்பக்கத்தில் உள்ள தோட்டங்களில் உள்ள போர்வெல்களில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டது. வணிக நோக்கில் நிலத்தடி நீரை விற்பனை செய்யக் கூடாது என பலமுறை கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.இந்நிலையில் நேற்று தண்ணீர் லாரிகளை சிறைபிடிக்கும் போராட்டம் நடத்த போவதாக கிராம மக்கள் அறிவித்ததோடு நேற்று மாலை செங்கழனிபுதூர்- கிருஷ்ணாபுரம் செல்லும் சாலையில் தண்ணீர் லாரிகளை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.தகவல் அறிந்து வந்த மடத்துகுளம் வருவாய் ஆய்வாளர் மாறன் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார். இனிமேல் வணிக நோக்கில் நிலத்தடி நீர் விற்பனை செய்வதை தடுக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Related Stories: