குன்னூர் அருகே காயத்துடன் சுற்றித்திரிந்த காட்டு மாடு பலி கு

குன்னூர், ஜூலை 23:  குன்னூர் அருகே காயத்துடன் சுற்றித்திரிந்த காட்டுமாடு பலியானது.  குன்னூர் எம்.ஆர்.சி. பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு காட்டு மாடு ஒன்று வாய் பகுதி கிழிந்த நிலையில்  சுற்றி வந்தது. அதனை கண்ட பொது மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.   இதையடுத்து வனத்துறையினர் காட்டு மாட்டை கண்காணித்து வந்தனர். அதற்கான முதலுதவி அளிக்க முடியாததால் காட்டு மாடு தண்ணீர் மற்றும் உணவு இன்றி நேற்று உயிரிழந்தது. இந்த காட்டு மாடு உயிரிழந்த சம்பவம் வனவிலங்கு ஆர்வலர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து வனத்துறையினர்  விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால் காயம் மற்றும் நோயால் பாதிக்கப்படும் வனவிலங்குகளுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் முதுமலை அல்லது கோவையிலிருந்து வர வேண்டியுள்ளது. எனவே குன்னூர், ஊட்டி பகுதியில் கால்நடை மருத்துவமனை அமைக்க வேண்டும் என  கோரிக்கை விடுத்துள்ளனர்.    இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது: உயிரிழந்த காட்டு மாடு  மற்றொரு காட்டு மாட்டுடன் சண்டை போட்டு காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவதியடைந்து வந்த மாடு உயிரிழந்தது என தெரிவித்தனர். வனவிலங்கு ஆர்வலர்கள் கூறியதாவது: இறந்தது பெண் காட்டு மாடு, பெண் மாடுகள் மற்றொரு மாட்டுடன் மோதிக்கொள்வதில்லை. அவ்வாறு  மோதல் ஏற்பட்டாலும் ஒன்றுடன் ஒன்று தலையில் மட்டுமே மோதிக்கொள்ளும் இது போன்று நாக்கு பகுதி கிழியும் அளவிற்கு  மோதிக்கொள்ளாது. மேலும் நாட்டுவெடி கடித்ததால் மட்டுமே இது போன்று காயம் ஏற்படும் என்றனர்.  இந்நிலையில், காட்டு மாடுக்கு பிரேத பரிசோதனை செய்து, அதே பகுதியில் அடக்கம் செய்யப்பட்டது.

Related Stories: