டாஸ்மாக் கடையை அகற்ற கோரி 6வது முறையாக பொது மக்கள் கலெக்டரிடம் மனு

ஊட்டி, ஜூலை 23: ஊட்டி அருகேயுள்ள கட்டபெட்டு பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற கோரி 6வது முறையாக பொதுமக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.   ஊட்டி அருகேயுள்ள கட்டபெட்டு பகுதியில் டாஸ்மாக் கடை உள்ளது. இங்கு மதுபானங்களை வாங்கும் குடிமகன்கள் காளியம்மன் கோயில் வாசலில் அமர்ந்து மது அருந்த துவங்கி விட்டனர். கட்டபெட்டு, நடுஹட்டி, தொகலட்டி, பாரதி நகர், செல்வபுரம், எல்லக்கம்பை, ஒன்னோரை ஆகிய பொதுமக்கள் பிரதான சாலை வழியாக நடந்து செல்கின்றனர். அவ்வாறு செல்ல கூடிய பொதுமக்களுக்கு குறிப்பாக, பெண்களுக்கு குடிமகன்களால் பாதுகாப்பு இல்லை. இங்குள்ள பயணியர் நிழற்குடையை மது அருந்தும் கூடாரமாக மாற்றியுள்ளனர். இதனால், வெயில் மற்றும் மழை காலங்களில் இதனை பயன்படுத்த முடிவதில்லை.   மேலும் குடிமகன்கள் பொது இடங்களில் சிறுநீர் கழித்தல், தகாத வார்த்தைகள் பேசுதல் போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். கடைக்கு அருகாமையில் வழிபாட்டு தலங்கள் உள்ளது. இதனால், வழிபாட்டு தலங்களுக்கு செல்பவர்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. மேலும், குடிமகன்கள் காலி மதுபாட்டில்களை விவசாய நிலங்கள், தேயிைல தோட்டங்களில் வீசி எரிகின்றனர். இதனால் விவசாய பணிகளும் பாதிக்கிறது. எனவே கட்டபெட்டு பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுபான கடையை நிரந்தரமாக மூடி பொதுமக்களின் நலனை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடந்த இரு மாதங்களில் நடந்த 5 மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்திற்கு வந்து இப்பகுதி மக்கள் மனு அளித்தனர். ஆனால், இதுவரை இந்த மதுக்கடையை அகற்ற மாவட்ட நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இந்நிலையில், நேற்று அப்பகுதி மக்கள், வயதானவர்கள் என 50க்கும் மேற்பட்டோர் 6வது முறையாக இந்த கட்டபெட்டு பகுதியில் உள்ள மதுக்கடையை அகற்ற கோரி மனு அளிக்க வந்தனர். இவர்கள் கலெக்டர் அலுவலகத்ைத முற்றுகையிட்டு மனுவை மாவட்ட கலெக்டரிடம் வழங்கினர்.

Related Stories: