மானியத்துடன் தீவனப்பயிர் அபிவிருத்தி திட்டம்

கோவை, ஜூலை 23:  கோவை மாவட்டத்தில் கால்நடை பராமரிப்பு துறையின் மூலம் அரசு மானியத்துடன் கூடிய தீவனப்பயிர் சாகுபடி திட்டத்தில் பயன்பெற விவசாயிகளுக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது. கால்நடைகளின் உற்பத்தி திறனுக்கு தீவனம் மற்றும் பசுந்தீவனம் இன்றியமையாதது. பால் உற்பத்தியை அதிகரிக்க கறவை மாடுகளுக்கு தேவையான பசுந்தீவனம் அளிக்க வேண்டும். தீவன பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில் தமிழக அரசு கடந்த 7 வருடங்களாக மாநில தீவின அபிவிருத்தி திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில், கோவை மாவட்டத்தில் கால்நடை பராமரிப்பு துறையின் மூலம் நடப்பாண்டில் அரசு மானியத்துடன் கூடிய தீவனப்பயிர் சாகுபடி திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

அதன்படி, நூறு சதவீதம் அரசு மானியத்தில் நிலையான பசுந்தீவன உற்பத்தி செய்யும் வகையில் கோ4/ ேகா5 தீவன புல் கரணைகள் 4 சென்ட், மறுதாம்பு தீவனச்சோளம் 2 சென்ட், ஆப்பிரிக்கன் நெட்டை மக்காச்சோளம் 1 சென்ட், தீவன தட்டைபயிறு 1.5 சென்ட், வேலிமசால் 1.5 சென்ட் பரப்பில் சாகுபடி செய்ய தீவன விதைகள், ஒரு பயனாளிக்கு அதிகபட்சம் ஒரு ஏக்கர் பரப்பளவிற்கு வழங்கப்படும். பாசனவசதி இல்லாத விவசாயிகளுக்கு மானவாரியில் தீவன உற்பத்திக்காக தீவன சோளம் மற்றும் தீவன தட்டைப்பயறு சாகுபடி செய்ய தீவன விதைகள் ஒரு பயனாளிக்கு அதிகபட்சம் ஒரு ஏக்கருக்கு வழங்கப்படும். இத்திட்டத்தில், விலையில்லா கறவை பசுக்கள் திட்டத்தில் பயன்பெற்ற பயனாளிகள், சிறு, குறு விவசாயிகள், ஆவின் பயனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இனம் வாரியாக 30 சதவீதம் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள். ஒருவர் ஒரு திட்டத்தில் மட்டுமே சேர முடியும். கடந்த ஆண்டு இந்த திட்டத்தில் பயன் பெற்றவர்கள் மீண்டும் பெற முடியாது. இதில், பயன்பெற விரும்பும் விவசாயிகள் தங்கள் அருகில் உள்ள கால்நடை மருத்துவ நிலையங்களை அணுக வேண்டும் என மாவட்ட கலெக்டர் ராசாமணி தெரிவித்துள்ளார்.

Related Stories: