ஈரோடு மத்திய கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் வாங்கிய கடன்கள் 99.25% திரும்ப செலுத்தியதால் வாராக்கடன் இல்லை

ஈரோடு, ஜூலை 23: ஈரோடு மத்திய மாவட்ட கூட்டுறவு வங்கி தலைவர் கிருஷ்ணராஜ் கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2018-2019ம் ஆண்டில் டிசம்பர் மாதம் வரை நல்ல மழை பெய்தது. இதனால், விவசாயிகள் தங்களது சாகுபடியின் பரப்பளவினை அதிகரித்தனர். அப்போது, மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் பயிர் கடன் இலக்கு ரூ.631 கோடி என நிர்ணயிக்கப்பட்டு, முழு அளவில் கடன் வழங்கப்பட்டது. இதேபோல், நடப்பாண்டும் ரூ.800 கோடி பயிர் கடன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், நடப்பாண்டு மழை குறைவாக உள்ளதாலும், பாசன வாய்க்கால்களில் தண்ணீர் திறக்கப்படாததால் விவசாயிகள் கிணற்று பாசனம் மற்றும் மோட்டார் மூலம் பாசனம் செய்பவர்களே கடன் பெற்றுள்ளனர். இதனால், விவசாயிகள் ரூ.50 கோடிக்கு குறைவாக பயிர் கடன் பெற்றுள்ளனர். ஆற்றிலும், வாய்க்காலிலும் நீர் திறக்கும்போது அல்லது பருவமழை வந்ததும் விவசாயிகள் அதிகளவில் பயிர் கடன் பெறுவார்கள். கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் பயிர் கடன் இலக்கு முழுமையாக எட்டிவிடுவோம்.இருப்பினும், தற்போது ரூ.55 கோடிக்கு மத்திய கால கடனும், ரூ.96 கோடிக்கு நகைக்கடனும் வழங்கப்பட்டுள்ளது. மேலும், ரூ.20 கோடிக்கு கறவை மாட்டு கடனும் வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டுகளில் பயிர் கடன், சிறு தொழில் கடன், மத்திய கால கடன் என அனைத்திலும் 99.25 சதவீத தொகையை பயனாளிகள் வங்கியில் திரும்ப செலுத்திவிட்டனர். இதனால், மத்திய கூட்டுறவு வங்கியில் வராக்கடன் எதுவும் நிலுவை இல்லாததால் என அதிகாரிகள் பெருமிதம் அடைந்துள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: