மஞ்சினீஸ்வரர் அய்யனார் கோயிலில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு

காலாப்பட்டு, ஜூலை 23:    புதுவை அடுத்த தமிழக பகுதியான கீழ்புத்துப்பட்டில் மஞ்சினீஸ்வரர் அய்யனாரப்பன் கோயில் அமைந்துள்ளது. இந்நிலையில் ஆடி மாதங்களில் 5 திங்கட் கிழமைகளில் இக்கோயில் விழாக்கோலம் பூண்டிருக்கும். இந்த நாட்களில் பல்வேறு பகுதிகளில் இருந்து பலர் குடும்பத்துடன் வந்து வழிபாடு செய்வார்கள்.  ஆடி மாதத்தின் முதல் திங்கட் கிழமையான நேற்று மஞ்சினீஸ்வரர் அய்யனாரப்பன் கோயிலில் விசேஷ வழிபாடு நடந்தது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் அய்யனாரை வழிபட வந்தனர். அவ்வாறு வந்தவர்கள் தலையில் மொட்டை அடித்து, காதணி விழா நடத்தியும், ஆடு வெட்டி விருந்து வைத்தும் அங்குள்ள எல்லை காத்த சாமிகள், குதிரை வீரர்களை வணங்கினர். பின்னர் மஞ்சினிஸ்வரர் அய்யனாரை வழிபட்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் செய்திருந்தனர்.

இரண்டரை வயது பெண்குழந்தை தண்ணீர் தொட்டியில் மூழ்கி சாவு

வில்லியனூர், ஜூலை 23:       வில்லியனூர் அருகே விளையாடிக்கொண்டிருந்த பெண் குழந்தை, அங்கு புதிதாக கட்டப்படும் வீட்டின் கீழ்மட்ட தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து பரிதாபமாக இறந்தது. இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தை இறந்ததால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கி உள்ளது. வில்லியனூர் அருகே உள்ள ஆண்டியார்பாளையம் பகுதியை சேர்ந்தவர் விஸ்வநாதன் (24), நெட்டப்பாக்கம் அருகே ஏரிப்பாக்கத்தில் உள்ள தனியார் டயர் கம்பெனியில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு லீனா (20) என்ற மனைவியும், சியாசி என்ற இரண்டரை வயது பெண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் நேற்று காலை மங்கலம் கோல்டன்சிட்டி பகுதியில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் விஸ்வநாதன் குழந்தையை விட்டுள்ளார். அங்கு குழந்தை விளையாடிக் கொண்டிருந்தது. மதிய நேரத்தில் அங்கு சென்ற விஸ்வநாதன் குழந்தை எங்கே என்று கேட்டுள்ளார். அதற்கு பெற்றோர், வெளியே விளையாடிக் கொண்டிருக்கிறது என்று கூறினார்களாம். இதையடுத்து அங்கு தேடிப்பார்த்தபோது எங்கும் காணவில்லை. அக்கம் பக்கத்தில் விசாரித்தபோது அங்கு புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டின் முன்பு கட்டப்பட்டுள்ள கீழ்நிலை தொட்டியில் நீரில் மூழ்கிய நிலையில் குழந்தை மயங்கி கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த விஸ்வநாதன் மற்றும் குடும்பத்தினர் புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.  இதுகுறித்த புகாரின் பேரில் மங்கலம் உதவி சப்- இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி மற்றும் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த பெண் குழந்தையின் உடலைப்பார்த்து அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. இச்சம்பவத்தால் ஆண்டியார்பாளையம் கிராமமே சோகத்தில் மூழ்கி உள்ளது.

Related Stories: