பொது இடத்தில் இருந்த குப்பைகளை அகற்றிய எம்எல்ஏ

திருபுவனை, ஜூலை 23:   புதுச்சேரியில் சட்டமன்ற கூட்டம் நடந்த நிலையில், திருபுவனை எம்எல்ஏ சட்டமன்றம் செல்லாமல் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் குப்பை அகற்றும் பணியில் ஈடுபட்டார்.திருபுவனை தொகுதிக்கு உட்பட்ட மதகடிப்

பட்டு, திருவண்டார்கோவில் ஆகிய பகுதிகளில் தேங்கும் குப்பைகளை திருபுவனை கொம்யூன் பஞ்சாயத்து சார்பில் டெண்டர் விடப்பட்டு திருபுவனை பாளையம் பகுதியில் டிராக்டர் மூலம் கொட்டப்பட்டு வந்தது. இந்நிலையில் திருபுவனை பாளையம் பகுதி மக்கள் தங்கள் பகுதியில் குப்பை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதனிடையே கடந்த மாதம் திருபுவனை கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் பணி ஓய்வுபெற்றார். அதிலிருந்து குப்பைகள் முறையாக அகற்றப்படவில்லை. இதையடுத்து ஆங்காங்கே குப்பைகள் தேங்கி துர்நாற்றம் வீசியது. குப்பை அள்ளப்படாதது குறித்து தினகரன் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. இதை தொடர்ந்து திருபுவனை தொகுதி எம்எல்ஏ கோபிகா, திருபுவனை கொம்யூன் பஞ்சாயத்து பணிகளை கூடுதலாக கவனித்து வரும் நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் மனோகருடன் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, குப்பை கொட்டுவதற்கு உடனடியாக தனியிடம் தேர்வு செய்ய நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினார். இதுகுறித்து அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையர் தெரிவித்தார்.

 ஆனால் குப்பை கொட்டுவதற்கு உரிய இடம் தேர்வு செய்யப்படாமலே உள்ளது. இதனால் மதகடிப்பட்டு கடைவீதி உள்ளிட்ட இடங்களில் அதிகளவில் குப்பை தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இதுகுறித்து எம்எல்ஏவிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதை தொடர்ந்து நேற்று குப்பையை ஏற்றும் டிராக்டருடன் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் மற்றும் ஆணையரை வரவழைத்த கோபிகா எம்எல்ஏ, மதகடிப்பட்டு பகுதியில் உள்ள குப்பையை அவரே நேரடியாக அகற்றினார். அவருடன் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்களும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் அங்கிருந்து அகற்றப்பட்ட குப்பைகளை, அருகில் உள்ள ஏரியில் கொட்டுவதற்காக எடுத்து சென்றனர்.அப்போது பொதுப்பணித்துறை ஊழியர்கள் ஏரியில் குப்பைகளை கொட்டக்கூடாது என தடுத்து நிறுத்தினர். உடனே, பொதுப்பணித்துறை உயர் அதிகாரியிடம் தொடர்பு கொண்ட கோபிகா எம்எல்ஏ, தற்போது குப்பை கொட்டுவதற்கு இடமில்லை என்பதால் இங்குதான் கொட்டமுடியும். குப்பை கொட்டுவதற்கு தனியாக இடம் தேர்வு செய்தபிறகு இங்கு குப்பை கொட்டுவதை நிறுத்திக் கொள்கிறோம் என தெரிவித்தார். இதையடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் அனுமதி அளித்ததால் மதகடிப்பட்டு ஏரியில் குப்பை கொட்டப்பட்டது. குப்பை கொட்டுவதற்கு இடம் இல்லாமல், பொது இடத்தில் குப்பை தேங்கி இருந்த நிலையில் எம்எல்ஏவே நேரடியாக வந்து குப்பை அகற்றியதால் வியாபாரிகளும், பொதுமக்களும் எம்எல்ஏவுக்கு நன்றி தெரிவித்தனர். சட்டசபையில் சிறப்பு கூட்டம் நடைபெற்ற நிலையில் அங்கு செல்லாமல் கோபிகா எம்எல்ஏ குப்பை அகற்றும் பணியில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories: