புதுவையில் மாகே மக்கள் பேரணி- ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி, ஜூலை 23:     தொகுதியை அரசு புறக்கணிப்பதாக கூறி புதுவையில் மாகே மக்கள் பேரணி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  புதுவையின் பிராந்தியமாக உள்ள மாகே தொகுதிக்கு நிதி ஒதுக்கீட்டில் அரசு  பாரபட்சம் காட்டுவதாகவும், இத்தொகுதி எம்எல்ஏ மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியைச் சேர்ந்தவராக இருப்பதால் அப்பகுதி மக்களை அரசு புறக்கணிப்பதாகவும்  அக்கட்சியின் மாகே பொறுப்பாளர்கள் குற்றச்சாட்டை முன் வைத்திருந்தனர். இந்த நிலையில் மாகே பொதுப்பணித்துறையில் பணிமுடிந்த ஒப்பந்த  தொழிலாளர்களுக்கு வழங்கப்படாமல் உள்ள நிலுவைத் தொகை ரூ.2.20 கோடி  தரக்கோரியும், கடலோர வளைவு பகுதியில் கழிவுநீர் ஓடை அமைக்க வேண்டும் என்பது  உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாகே பகுதியைச் சேர்ந்த  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மக்கள் புதுவையில் நேற்று  பேரணி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சாரல் மழையையும் பொருட்படுத்தாமல்  பாலாஜி தியேட்டர் அருகே திரண்ட மாகே பகுதி மக்கள் அங்கிருந்து பேரணியாக  புறப்பட்டனர். பேரணியை கட்சியின் பிரதேச குழு உறுப்பினர் முருகன் தொடங்கி  வைத்தார். பேரணியானது காமராஜர் சாலை, நேருவீதி, காந்தி வீதி வழியாக மிஷன்  வீதியை சென்றடைந்தனர். அங்கு ஜென்மராக்கினி கோயில் எதிரே அவர்கள்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் கேரள மாநில  செயலவை உறுப்பினர் சுரேந்தரன், மாகே பகுதி செயலாளர் சுனில்குமார், பள்ளூர்  பகுதி செயலாளர் சுரேந்திரன், தலச்சேரி செயலாளர் பவித்ரன், வடக்கன்  ஜனார்த்தனன், புதுவை பிரதேச செயலாளர் ராஜாங்கம், தமிழ்மாநிலக்குழு  உறுப்பினர் பெருமாள் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் பெண்கள் உள்பட  100க்கும் மேற்பட்டோர் நனைந்தபடி கலந்து கொண்டு முன்னாள் அமைச்சர்  வல்சராஜின் தலையீடு இருப்பதால் மாகே பகுதிக்கு இலவச திட்டங்கள்  புறக்கணிக்கப்படுவதாக கூறி புதுச்சேரி அரசுக்கு எதிராக கோஷமிட்டனர். மேலும்  தொகுதி எம்எல்ஏ ராமச்சந்திரன் வலியுறுத்தும் முக்கிய வளர்ச்சி பணிகளை  தொகுதியில் அரசு நிறைவேற்றித்தர வேண்டுமெனவும் வலியுறுத்தினர். மேலும்  மாகேவை புறக்கணித்தால் மிகப்பெரிய அளவில் மீண்டும் போராட்டத்தில்  ஈடுபடுவோம் எனவும்

எச்சரித்தனர்.

Related Stories: