திருப்பத்தூரில் குடிநீர் கேட்டு திரண்டு வந்தனர் காலிக்குடங்களுடன் சப்- கலெக்டர் அலுவலகம் முற்றுகை: நடவடிக்கை எடுப்பதாக அதிகாரி உறுதி

திருப்பத்தூர், ஜூலை 23: திருப்பத்தூரில் குடிநீர் கேட்டு காலிக் குடங்களுடன் உதவி கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பத்தூர் அடுத்த ஜோலார்பேட்டை ஒன்றியம் அம்மையப்பன் நகர் ஊராட்சியில் சுமார் 1300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு கடந்த சில ஆண்டுகளாகவே குடிநீர் இன்றி பல கி.மீ தூரம் சென்று குடிநீர் எடுத்து வரும் அவல நிலை உள்ளது. தற்போது வறட்சியால் தண்ணீர் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.இதுகுறித்து அப்பகுதி மக்கள் தமிழக முதல்வர், கலெக்டர், குடிநீர் வடிகால் வாரிய இயக்குநர் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகளுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு 1000 குறுஞ்செய்திகளும், ஆன்லைனில் புகாரும் அளித்துள்ளனர். மேலும் ஊராட்சி செயலாளரிடம் புகார் செய்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லைஇதனை கண்டித்து அப்பகுதி மக்கள் நேற்று காலிக்குடங்களுடன் திருப்பத்தூர் சப்-கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் கூறுகையில், ‘அம்மையப்பன் நகரில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் தண்ணீர் இல்லை. ஜோலார்பேட்டை நகராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளுக்கு காவிரி கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு அப்பகுதி மக்கள் குடிநீரை பயன்படுத்தி வருகின்றனர்.அருகே உள்ள கட்டேரி ஊராட்சியில் இருந்து எங்கள் ஊராட்சி 300 மீட்டர் தொலைவில் தான் உள்ளது. அங்கிருந்து அம்மையப்பன் நகர் பகுதிக்கு காவிரி கூட்டு குடிநீர் திட்ட குழாய்கள் அமைத்து தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.பின்னர், இதுகுறித்து சப்-கலெக்டர் பிரியங்கா பங்கஜத்திடம் மனு அளித்தனர். தொடர்ந்து, அங்கேயே அமர்ந்து குடிநீர் வழங்கும் வரை கலைந்து செல்ல மாட்டோம் என்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.பின்னர், மதியம் 2 மணியளவில் சப்-கலெக்டர் பிரியங்கா பங்கஜம், ேஜாலார்பேட்டை பிடிஓ பாலாஜி மற்றும் அதிகாரிகளுடன் அம்மையப்பன் நகர் பகுதிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர், கலெக்டர் உத்தரவின் பேரில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதை ஏற்று பொதுமக்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.

Related Stories: