தேர்தல் களம் சூடுபிடிக்கிறது வேலூர் மக்களவை தொகுதியில் வீடுகள், லாட்ஜ்களுக்கு கிராக்கி வெளியூரை சேர்ந்த நிர்வாகிகள் குவிகின்றனர்

வேலூர், ஜூலை 23: வேலூர் மக்களவை தொகுதியில் பிரசாரம் செய்ய வெளியூரை சேர்ந்த திமுக, அதிமுக நிர்வாகிகள் தொடர்ந்து வருகை தருவதால் வாடகை வீடுகள், லாட்ஜ்களுக்கு கிராக்கி அதிகரித்துள்ளது.வேலூர் மக்களவை தொகுதிக்கான வாக்குப்பதிவு வரும் 5ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த 11ம் தேதி தொடங்கியது. நேற்று இறுதி வேட்பாளர் பட்டியல் வௌியிடப்பட்டது. இந்த தொகுதியில் திமுக- அதிமுகவுக்கு மட்டுமே நேரடி போட்டி நிலவுவதால் இருகட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் முதற்கட்ட பிரசாரத்தை தொடங்கி உள்ளனர்.இந்நிலையில், திமுக சார்பில் சட்டப்பேரவை தொகுதி வாரியாக முன்னாள் அமைச்சர்களையும், தற்போதைய எம்எல்ஏக்களையும், கட்சியின் முக்கிய நிர்வாகிகளையும் தேர்தல் பொறுப்பாளர்களாக நியமனம் செய்துள்ளனர். இதேபோல் அதிமுக சார்பிலும் அமைச்சர்கள், எம்எல்ஏக்களை தேர்தல் பொறுப்பாளர்களாக நியமனம் செய்துள்ளனர்.

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 20ம் தேதி நிறைவடைந்ததையொட்டி அனைத்து எம்எல்ஏக்களும், அமைச்சர்களும் தங்களது சொந்து ஊர்களுக்கு சென்றனர். பின்னர் அங்கிருந்து தங்களது தொகுதிக்கு உட்பட்ட முக்கிய நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்களுடன் வேலூர் மக்களவை தொகுதிக்கு படையெடுத்து வருகின்றனர். திமுகவை பொறுத்தவரை சட்டப்பேரவை தொகுதி வாரியாக பொறுப்பாளர்கள் தலைமையில் நேற்று முதல் பிரசாரத்தை தொடங்கியுள்ளனர்.

இதற்கிடையில் திமுக, அதிமுகவை சேர்ந்த வெளியூர் நிர்வாகிகள் குக்கிராமங்கள் முதல் நகரங்கள் வரை பிரசாரம் செய்ய அணி அணியாக வந்த வண்ணம் உள்ளனர். இதனால் அவர்கள் தொகுதில் தங்கி தேர்தல் பணியாற்றுவதற்கு வீடுகள், லாட்ஜ்களை முன்பதிவு செய்து வருகின்றனர்.தேர்தல் பிரசாரம் செய்ய இன்னும் 11 நாட்களே உள்ளதால் திமுக, அதிமுக கட்சிகளை சேர்ந்த முக்கிய தலைவர்கள் வேலூர் மக்களவை தொகுதிக்கு விரைவில் வர உள்ளனர். இதனால் அப்போதும் அதிகளவில் வெளியூர் நிர்வாகிகள் வர வாய்ப்பு உள்ளது.இதனால் உள்ளூர் கட்சி நிர்வாகிகள் தங்கள் பகுதியில் உள்ள பெரிய ஓட்டல்கள், லாட்ஜ்கள் மற்றும் வீடுகளை முன்கூட்டியே வாடகைக்கு எடுத்துள்ளனர். வேலூர் மக்களவை தொகுதியில் உள்ள 6 சட்டப்பேரவை தொகுதிகளிலும் உள்ள லாட்ஜ்கள், வீடுகளை முன்கூட்டியே கட்சி நிர்வாகிகள் முன்பதிவு செய்து வருகின்றனர். கிராக்கி அதிகமாக உள்ளதால் லாட்ஜ்கள், வீடுகள், ஓட்டல்களில் தங்கும் கட்டணத்தையும் சற்று அதிகரித்துள்ளனர்.

Related Stories: