பல குடும்பங்கள் தற்கொலைக்கு ஆளாவதால் தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் மாதர் சம்மேளன மாநாட்டில் வலியுறுத்தல்

மன்னார்குடி, ஜூலை23: பல குடும்பங்கள் தற்கொலைக்கு ஆளாவதால் தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் என கோட்டூர் அருகே நடைபெற்ற மாதர் சம்மேளன மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் 14 வது ஒன்றிய மாநாடு கோட்டூரில் நடைபெற்றது. மாநாட்டிற்கு ஒன்றிய தலைவர் சுலோச்சனா தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் உஷா ஆண்டறிக்கையை வாசித்தார். மாநாட்டை வாழ்த்தி மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் அம்புஜம், மாவட்ட துணை செயலாளர் பாஸ்கரவள்ளி உள்ளிட்டோர் ஆகியோர் பேசினர்.இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர், முன்னாள் எம்எல்ஏ சிவபுண்ணியம் மாநாட்டை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். மாநாட்டில், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்து காவிரி படுகையை பாதுக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் . நீட் தேர்வால் தமிழக மாணவர்கள் வஞ்சிக்கப் படுவதால் நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விளக்கு அளிக்க வேண்டும். தமிழகத்தில் நிலவும் குடிநீர் பிரச்சனையை போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தியாவில் அரசு பணி முதல் கடைநிலை ஊழியர்கள் வரையிலும் பள்ளி, கல்லூரி மாணவிகள் அனைவரும் தொடர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுகிறார்கள் ஆகவே நடைமுறையில் உள்ள சட்டத்தை திருத்தி குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும். தமிழகத்தில் வீதிகள் தோறும் மதுக்கடைகள் திறக்கப்பட்டதால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் முதல் குடும்ப தலைவர்கள் வரை குடிகாரர்களாக மாறியதன் விளைவு பல குடும்பங்கள் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு ஆளாகி விடுகிறார்கள் எனவே தமிழகத்தில் பூரண மதுவிலக் கை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.முன்னதாக மாவட்ட நிர்வாகக்குழு லிட்டின் மேரி வரவேற்றார். முடிவில் ஒன்றிய துணைச் செயலாளர் மஞ்சுளா நன்றி கூறினார்.

Related Stories: