தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கு நெற்பயிர் மேலாண்மை பயிற்சி

பட்டுக்கோட்டை, ஜூலை 23: பட்டுக்கோட்டை அடுத்த மதுக்கூர் வட்டாரம் கீழக்குறிச்சி கிழக்கு வருவாய் கிராமத்தில் தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கான நெற்பயிர் அமைப்பு சார்ந்த மேலாண்மை பயிற்சி நடந்தது. மதுக்கூர் துணை வேளாண்மை அலுவலர் கலைச்செல்வன் பங்கேற்று பருவத்துக்கேற்ற நெல் ரகங்கள், விதைநேர்த்தி முறைகள், ஒற்றைநெல் சாகுபடி முறை, மண் மற்றும் பாசனநீர் மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு எடுத்து கூறினார். மேலும் விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த களை நிர்வாகம், ஒருங்கிணைந்த உரம் மற்றும் ஊட்டச்சத்து மேலாண்மை, நுண்ணூட்டச்சத்து குறைபாடு, நிவர்த்தி முறை, பயிரை தாக்கும் பூச்சிகள், கட்டுப்படுத்தும் முறை, நன்மை செய்யும் பூச்சிகளை கண்டறிதல், நெற்பயிரை தாக்கும் நோய்கள் மற்றும் கட்டுப்படுத்தும் முறை, நெல் சாகுபடியில் நவீன இயந்திரங்களின் பயன்பாடு மற்றும் பராமரிப்பு முறை குறித்து எடுத்து கூறினார்.இதையடுத்து நெல் சாகுபடி அறுவடைக்குப்பின் அதே வயலில் உயர் விளைச்சல் தரக்கூடிய புதிய உளுந்து விதைகளை கொண்டு சாகுபடி செய்து அதிக மகசூல் பெற விவசாயிகளை அறிவுறுத்தினார். மேலும் விவசாயிகளின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தார். இதில் திரளான விவசாயிகள் பங்கேற்று பயனடைந்தனர். ஏற்பாடுகளை கீழக்குறிச்சி வேளாண்மை உதவி அலுவலர் ஜெரால்டுஞானராஜ் செய்திருந்தார்.

Related Stories: