ஆடி திருவிழா பாதுகாப்புக்கு 300 போலீசார்

ஊத்துக்கோட்டை, ஜூலை 19:  பெரியபாளையம் பவானி அம்மன் கோயில் ஆடி திருவிழா பாதுகாப்பில் 300 போலீசார் ஈடுபடுவார்கள் என்று டிஎஸ்பி சந்திரதாசன் கூறினார். பெரியபாளையம் ஸ்ரீபவானி அம்மன் கோயிலின் ஆடித்திருவிழா நேற்று முன்தினம் தொடங்கியது. 10வாரங்கள் இந்த விழா நடைபெறும். இதில் தமிழகம், ஆந்திரா உள்பட பல மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வந்து அம்மனை வழிபடுவார்கள். வெளியூர்களில் இருந்து வாகனங்களில் வரும் மக்கள்,சனிக்கிழமை இரவு தங்கி மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை பொங்கல் வைத்து, மொட்டையடித்தும் வேப்பிலை ஆடை அணிந்தும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்துவார்கள்.

இந்த நிலையில் ஊத்துக்கோட்டை டிஎஸ்பி சந்திரதாசன் கூறியதாவது:

பக்தர்களுக்கு குடிநீர், கழிப்பறை வசதி உள்பட அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதன் ஒருகட்டமாக திருவிழாவிற்கு வரும் பக்தர்கள் பாதுகாப்பாக டிஎஸ்பி தலைமையில் 250 போலீசார் மற்றும் 50 ஊர்க்காவல் படையினர் என 300 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். திருவிழாவில் சூதாட்டம், திருட்டு, பிக்பாக்கெட் தடுக்கப்படும். இவ்வாறு செயல்படும் கும்பலை கண்காணிக்க மாறுவேடத்தில் போலீசார் ஈடுபடுவார்கள். 10 வாரங்களும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ஆந்திராவில் இருந்து சென்னை செல்லும் லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் ஊத்துக்கோட்டையில் இருந்து திருவள்ளூர், சத்தியவேடு வழியாகவும் சென்னையில் இருந்து வரும் வாகனங்கள், ஜனப்பன் சத்திரத்தில் இருந்து சத்தியவேடு வழியாகவும் திருப்பி விடப்படும்.இவ்வாறு டிஎஸ்பி கூறினார்.

Related Stories: