289 விநாடிகளில் 150 திருக்குறள் ஒப்புவித்து அரசு பள்ளி 3ம் வகுப்பு மாணவி உலக சாதனை: கலெக்டர் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்

திருவண்ணாமலை, ஜூலை 19: திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த அரசு பள்ளி 3ம் வகுப்பு மாணவி 289 நொடிகளில் 150 திருக்குறளை சரளமாக ஒப்புவித்து உலக சாதனை படைத்தார். அவருக்கு கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி உலக சாதனை நிகழ்த்தியதற்கான சான்றிதழ் வழங்கி பாராட்டினார். திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே உள்ள காவேரிப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் ஆனைக்குட்டி(31), இவரது மனைவி சத்யா(28). விவசாய கூலி வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். மூத்த மகள் தர்ஷினி(8), கல்லாங்குத்து ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வருகிறார். அவரது பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் திருக்குறள் வாசித்து, ஒப்புவிப்பதை ஊக்குவித்து வந்தனர். அதன்படி தர்ஷினி 1ம் வகுப்பு படிக்கும் போது மாணவர்களுக்கு இடையே நடத்தப்பட்ட திருக்குறள் ஒப்புவிக்கும் போட்டியில் 5 நிமிடங்களில் 27 திருக்குறள் ஒப்புவித்தார். இதனை பார்த்த ஆசிரியர்கள் அவருக்கு கூடுதல் பயிற்சி அளித்தனர். இதன் அடிப்படையில் தர்ஷினி 2ம் வகுப்பு படிக்கும் போது 4 நிமிடங்களில் 110 திருக்குறள் ஒப்புவித்தார். தற்போது, 3ம் வகுப்பு படித்து வரும் நிலையில் 5 நிமிடங்களில் 150 திருக்குறள் ஒப்புவிக்கும் அளவிற்கு முன்னேற்றம் அடைந்துள்ளார்.

மாணவியின் திறமையை அங்கீகரிக்கும் வகையில், உலக சாதனையில் பதிவு செய்ய சென்னையில் இயங்கிவரும் ட்ரையம்ப் வேல்டு ரெக்கார்ட்ஸ் (Triumph World Records) நிறுவனத்தில் விண்ணப்பித்துள்ளனர்.அதன் அடிப்படையில், திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமையில் உலக சாதனை முயற்சி நடந்தது. அப்போது, மாணவி தர்ஷினி 289 விநாடிகளில் (4.49 நிமிடங்கள்) 150 திருக்குறளை ஒப்புவித்து உலக சாதனை புரிந்தார். இதனை அங்கீகரிக்கும் வகையில் உலக சாதனை பதிவு செய்து, டிரம்ப் வேல்டு ரெக்கார்ட்ஸ் நிறுவனம் வழங்கிய சான்றிதழை கலெக்டர், மாணவி தர்ஷினியிடம் வழங்கினார். மேலும், பதக்கம், கேடயம் மற்றும் தங்கச்சங்கிலியை கலெக்டர் அணிவித்து பாராட்டினார். தொடர்ந்து மாணவி தர்ஷினியின் குடும்பத்தினர் சொந்த வீடு இல்லாமல் தனது தந்தை வழி தாத்தா வீட்டில் கூட்டுக் குடும்பமாக நெருக்கடியான இடத்தில் வசித்து வருவதை கலெக்டர் அறிந்து, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மூலமாக பசுமை வீடு திட்டத்தின் கீழ் புதிய வீடு கட்டுவதற்கான ஆணை வழங்கினார். இதில், திட்ட இயக்குநர் ஜெயசுதா, உதவி ஆட்சியர்(பயிற்சி) ஆனந்த்மோகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: