புதிய கல்விக்கொள்கை குறித்து கருத்து கேட்கும் கூட்டம் ஆர்வலர்கள் முற்றுகை

கோவை,ஜூலை 18; கோவை அவினாசி சாலையில் உள்ள  பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் புதிய கல்விக் கொள்கை குறித்து ஆசிரியர்கள் மற்றும் கல்வி அதிகாரிகளிடம் மண்டல அளவிலான கருத்து கேட்பு கூட்டம் நேற்று நடந்தது.

 மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கையை அனைத்து மாநிலங்களிலும் அமல்படுத்தும் பொருட்டு ஒவ்வொரு மாநிலத்திலும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், தமிழகத்தில் முதல் முறையாக மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் சார்பில் கோவையில் நேற்று மண்டல அளவிலான கருத்து கேட்கும் கூட்டம் நடைபெற்றது. பீளமேடு பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கோவை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், கரூர் மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் பணியாற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகள் கலந்துகொண்டனர்.  மேலும், கோவை மாவட்டத்தில் பணிபுரியும் அரசு பள்ளி ஆசிரியர்கள், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்கள், பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர் என சுமார் 100 பேர்  கலந்து கொண்டனர். மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இயக்குனர் பழனிச்சாமி இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

 இந்த கூட்டத்தில் பள்ளி கல்வி தொடர்பான 8 கொள்கைகள் மற்றும் பொது கல்வி தொடர்பான 3 கொள்கைகள் என மொத்தம் 11 கொள்கைகள் குறித்து விளக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பிற்பகல் நடைபெற்ற கூட்டத்தில் குழு விவாதம் நடைபெற்றது.

 இதுகுறித்து ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் பால்வசந்த குமார் கூறுகையில், ‘‘இந்த கூட்டத்தில் 11 கொள்கைகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து எங்களை 9 குழுக்களாக பிரித்து குழு விவாதம் நடத்தினர். பின்னர், எங்களது கருத்துகளை கூறியுள்ளோம். புதிய அம்சங்கள் வரவேற்கும் விதமாக அமைந்துள்ளது.’’ என்றார். இந்த நிலையில், அரசுக்கு சாதகமாக பேசுபவர்களை மட்டும் கூட்டத்திற்கு அழைத்துள்ளதாகவும், பிரச்னை வந்துவிடும் என்பதற்காக வெளியே சொல்லாமல் ரகசியமாக கூட்டம் நடத்தியதாகவும் கூறி த.பெ.தி.க., பொதுச்செயலாளர் ராமகிருட்டிணன், ம.தி.மு.க ஈஸ்வரன்,மாணவர் நல பெற்றோர் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தெய்வேந்திரன், சமூக ஆர்வலர்கள் மற்றும் கல்வியாளர்கள் கூட்டம் நடைபெற்ற இடத்தை முற்றுகையிட்டனர். மேலும், கூட்டம் நடத்திய அதிகாரிகளிடம் கேள்வியெழுப்பினர். இதுகுறித்து கிடைத்த தகவலின் பேரில் கல்லூரி வளாகத்தில் போலீசார் குவிக்கப்பட்டனர். தொடர்ந்து, கூட்டம் பாதியில் முடிக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: