சிவகாசியில் தனியார் பள்ளி அருகே வாகன நிறுத்தமாக மாறிய சாலை போக்குவரத்து இடையூறால் அவதி

சிவகாசி, ஜூலை 18: சிவகாசியில் தனியார் பள்ளி அருகே, சாலையில் மாணவர்களின் சைக்கிள்களை நிறுத்துவதால், போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது. சிவகாசியில் உள்ள மாரியம்மன் கோயில் அருகே, பழைய விருதுநகர் சாலையில் தனியார் பள்ளி உள்ளது. இங்கு 6 முதல் 12ம் வகுப்பு வரை உள்ளன. சுமார் 700க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இந்நிலையில், பள்ளி வளாகத்தில் இடவசதி இல்லாததால் மாணவர்கள் தங்களது சைக்கிள்களை, பள்ளி அருகே சாலையில் நிறுத்திவிட்டு செல்கின்றனர்.

இதனால், அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. நகரில் பழைய விருதுநகர் சாலை முக்கியச் சாலையாக இருப்பதால், வாகன போக்குவரத்து அதிகமாக உள்ளது. காலை மற்றும் மாலை வேளைகளில் இச்சாலையில் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். மேலும், சிவகாசி அருகே உள்ள பள்ளபட்டி ஊராட்சி, சாமிபுரம் காலனி, சோலை காலனி பகுதி மக்கள் இந்த சாலை வழியாகத்தான் சிவகாசி நகருக்குள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், பள்ளி மாணவர்கள் தங்களது சைக்கிள்களை சாலையில் நிறுத்துவதால், போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது. எனவே, தனியார் பள்ளி மாணவர்களின் சைக்கிள்களை பள்ளி வளாகத்திற்குள் நிறுத்தவும், காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து போலீசார் இப்பகுதியில், கண்காணிப்பு பணியில் ஈடுபடவும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: