நாய் கடித்து புள்ளிமான் பலி

அருப்புக்கோட்டை, ஜூலை 18: அருப்புக்கோட்டை அருகே, வாழ்வாங்கி பகுதியில் மான்கள் அதிகமாக உள்ளன. இவைகள் தண்ணீர் தேடி ஊர் பகுதிக்கு வருகின்றன. அப்போது நாய்கள் கடித்தும், வாகனங்கள் மோதியும் இறக்கின்றன. நேற்று ஆண் புள்ளிமான் ஒன்று தண்ணீர் தேடி வாழ்வாங்கிக்கு வந்தது. அப்போது, அப்பகுதி தெருநாய்கள் விரட்டி கடித்ததில், அந்த புள்ளிமான் இறந்தது. வத்திராயிருப்பு வனச்சரகர் கோவிந்தன், வனக்காவலர்கள் மற்றும் கால்நடை மருத்துவர் சத்தியபிரபா ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து, இறந்த மானின் உடலை உடற்கூறு செய்து புதைத்தனர். இறந்த மானிற்கு 3 வயது இருக்கும் என தெரிவித்தனர். தண்ணீர் தொட்டி அமைக்க கோரிக்கை: அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடி, செட்டிக்குறிச்சி, சிதம்பராபுரம், சேதுராஜபுரம் பகுதிகளில் கண்மாயை ஒட்டிய காட்டுப்பகுதிகளில் மான்கள் அதிகம் உள்ளன. இப்பகுதியில் தண்ணீர் இல்லாததால், மான்கள் தண்ணீர் தேடி ஊருக்குள் வருகின்றன. அப்போது நாய்கள் கடித்து பலியாகின்றன. எனவே, வனத்துறை நிர்வாகம் காட்டுப்பகுதியில், தண்ணீர் தொட்டி அமைத்து, தண்ணீர் நிரப்ப வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories: