தாசில்தார் அலுவலகத்தில் இண்டர்நெட் சேவை பாதிப்பு: சான்றிதழ் பெறுவதில் சிக்கல்

பரமக்குடி, ஜூலை 18:  பரமக்குடி தாலுகா அலுவலகத்தில் கடந்த ஒரு வாரமாக இண்டர்நெட் சேவை பாதிக்கப்பட்டதால், பயனாளிகள் சான்று பெற முடியாமல் கடும் அவதிப்பட்டனர்.

பரமக்குடி தாலுகா அலுவலகத்தின் மூலம் பிறப்பு, இறப்பு, சாதி சான்றிதழ்கள் உள்ளிட்ட அனைத்து சான்றிதழ்களும் இணையதள சேவை மையத்தின் மூலம் பதிவு செய்யப்பட்டு வழங்கப்படுகிறது. அதேபோல், விவசாயிகளுக்கு நிலத்திற்கான பட்டா, சிட்டா மற்றும் முதியோர் உதவித்தொகை போன்ற பல்வேறு அரசின் நலத்திட்டங்கள் இணையதள சேவையின் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவ,மாணவிகள் சான்றிதழ் பெற விண்ணப்பம் செய்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக பரமக்குடி தாசில்தார் அலுவலகத்தில் காலை முதல் மாலை வரை இணையதள சேவை பாதிக்கப்பட்டு வருகிறது. இதனால், பயனாளிகள் சான்றிதழ் பெறுவதற்கு நாள் முழுவதும் காத்திருந்து ஏமாற்றத்துடன் வீடு திரும்பி சென்றனர்.

இதுகுறித்து வருவாய் அலுவலர் ஒருவர் கூறுகையில், “இந்த அலுவலகத்திற்கு வரும் பிஎஸ்என்எல் இணைப்பு அடிக்கடி பழுதாகி விடுகிறது. மேலும் இணையதள பாதிப்பால், கலெக்டர் அலுவலகத்தில் இருந்து அனுப்பப்படும் முக்கியமான தகவல்களை பார்க்க முடியவில்லை. இதனால் மேல் அதிகாரிகளிடம் கெட்ட பெயர் எடுக்கும் நிலைக்கு ஆளாகி வருகிறோம் என்றார்.

Related Stories: