சந்திர கிரகணத்தை முன்னிட்டு அண்ணாமலையார் கோயிலில் நடைதிறப்பு, பூஜைகளில் மாற்றமில்லை தீர்த்தவாரி மட்டும் நடைபெறாது

திருவண்ணாமலை, ஜூலை 16: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், ஆனி பிரமோற்சவம் நடைபெறுவதால், சந்திர கிரகணத்தை முன்னிட்டு தீர்த்தவாரி நடைபெறாது என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.திருவண்ணாமலையில் ஆனி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் இன்று அதிகாலை 3 மணிக்கு தொடங்கி, நாளை அதிகாலை 3 மணிக்கு நிறைவடைகிறது. எனவே, இன்று இரவு பக்தர்கள் கிரிவலம் செல்ல உகந்ததாகும்.இந்நிலையில், இன்று நள்ளிரவு 1.32 மணி முதல் அதிகாலை 4.29 மணிவரை சந்திர கிரகணம் நிகழ்கிறது. பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தில் சந்திர கிரகணம் அமைவது குறிப்பிடத்தக்கது. ஆனாலும், அண்ணாமலையார் கோயில் நடைதிறப்பு, தினசரி கால பூஜைகள் போன்றவற்றில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

மேலும், சூரிய கிரகணம், சந்திர கிரகணம் நடைபெணும் போது, கோயில் குளங்களில் சுவாமி தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம். தற்போது, அண்ணாமலையார் கோயிலில் ஆனி பிரமோற்சவம் நடைபெறுகிறது. கோயிலில் விழா நடைபெறும் காலங்களில் கிரகணம் நிகழ்ந்தால், தீர்த்தவாரி நடத்துவது மரபு கிடையாது.எனவே, இன்று நள்ளிரவு நடைபெறும் சந்திர கிரகணத்தை முன்னிட்டு, கோயில் குளத்தில் தீர்த்தவாரி நடைபெறாது என அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Related Stories: