ஆசிரியர் சஸ்பெண்ட் கண்டித்து வகுப்புகளை புறக்கணித்து மாணவிகள் தர்ணா பெரணமல்லூரில் பரபரப்பு

பெரணமல்லூர், ஜூலை 16: பெரணமல்லூரில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் சஸ்பெண்ட் கண்டித்து மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து நேற்று தர்ணாவில் ஈடுபட்டனர்.திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லூரில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 400க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளி வேதியியல் பிரிவில் முதுகலை பட்டதாரி ஆசிரியராக சோனு என்பவர் பணியாற்றி வந்தார். இவர் கடந்த வாரம் திடீரென சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.இதனால் அதிர்ச்சியடைந்த பள்ளி மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ெஜயக்குமாரை போனில் தொடர்பு கொண்டு ஆசிரியர் சஸ்பெண்ட் குறித்து பேசியதாக தெரிகிறது. ஆனால் முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார் எந்த காரணத்தையும் கூறாமல் பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை அலைக்கழித்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த பிளஸ் 1, பிளஸ் 2 மாணவிகள் 100 பேர், திடீரென நேற்று காலை 9.30 மணியளவில் வகுப்பு புறக்கணித்து தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போது பள்ளி ஆசிரியர்கள், மாவட்ட கல்வி அலுவலர் வந்து பேச்சுவார்த்தை நடத்துவர் என தெரிவித்தனர். இதையடுத்து 2 மணி நேரம் நடந்த தர்ணாவை கைவிட்டு அனைவரும் கலைந்து வகுப்புக்கு சென்றனர்.அப்போது மாணவிகள் கூறியதாவது: எங்கள் பள்ளியில் தலைமை ஆசிரியர் இல்லாததால், வேதியியல் பிரிவு முதுகலை பட்டதாரி ஆசிரியர் சோனு, கடந்த ஜூன் மாதம் முதல் தலைமை ஆசிரியர் (பொறுப்பு) வகித்து வருகிறார். பள்ளியில் ஆசிரியர் பற்றாக்குறை காரணமாக தற்காலிக ஆசிரியர் கொண்டு பாடம் நடந்த பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் கடந்த சில ஆண்டுகளாக பணம் வசூலிக்கப்படுகிறது.

கடந்த வாரம் அதிக பணம் வசூலித்ததாக ஆசிரியர் சோனு சஸ்பெண்ட் செய்யப்பட்டார். முன்விரோதத்தால் அவர் பழிவாங்கப்பட்டுள்ளார். ஆசிரியர் சோனுவுக்கும், முதன்மை கல்வி அலுவலருக்கும் கடந்த ஆண்டு ஒரு விவகாரத்தில் முன்விரோதம் இருந்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு பிடிஏ செய்த தவறை காரணம் காட்டி இவரை முதன்மை கல்வி அலுவலர் சஸ்பெண்ட் செய்துள்ளார். ஆசிரியர் சோனு மீது நாங்கள் எதுவும் குற்றச்சாட்டு கூறியதில்லை. மீண்டும் ஆசிரியர் பள்ளிக்கு வரும் வரை நாங்கள் தொடர்ந்து வகுப்புகளை புறக்கணிப்போம். இவ்வாறு அவர்கள் கூறினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்படுத்தியது.

Related Stories: