பேகம்பூரில் குழாய் உடைப்பால் தினமும் நீரூற்று

திண்டுக்கல், ஜூன் 26: திண்டுக்கல் பேகம்பூரில் குழாய் உடைப்புகளால் தினமும் பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாகி வருவதாக பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர். திண்டுக்கல் மாநகராட்சியின் குடிநீர் ஆதாரமான ஆத்தூர் காமராஜர் நீர்த்தேக்கம் மைனஸ் 5 டிகிரிக்கு கீழ் சென்று விட்டது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதேபோல் நிலத்தடி நீர்மட்டமும் அதலபாதாளத்திற்கு சென்று விட்டது. இதனால் பொதுமக்கள் குடிப்பதற்கு ஒரு கேன் தண்ணீர் ரூ.30க்கும், அன்றாடம் உபயோகத்திற்கு தண்ணீர் ஒரு குடம் ரூ.5க்கும் வாங்கி பயன்படுத்தும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனினும் திண்டுக்கல் பகுதியில் குழாய் உடைந்து குடிநீர் வீணாகி வருவது தொடர்கதையாக உள்ளது. பேகம்பூரில் வத்தலக்குண்டு சாலை அருகே ஒரு குடிநீர் வால்வு உடைந்து மாதக்கணக்கில் தண்ணீர் ஓடி கொண்டிருக்கிறது. அதன் எதிர்புறம் ஜமால் தெரு அருகே மதுரை சாலையோரத்தில் பைப் உடைந்து தண்ணீர் விரயமாகி வருகிறது. இதுமட்டுமின்றி யானைதந்தத்தில் தனியார் பள்ளி அருகே குழாய் உடைந்து தண்ணீர் வீணாக சாலையில் ஓடுகிறது. இதுபோல் பேகம்பூர் பகுதியில் எப்போது தண்ணீர் திறந்து விட்டாலும் இந்த 3 உடைப்பில் இருந்தும் தண்ணீர் வீணாக வெளியேறி கொண்டிருக்கிறது. இதனால் ஒரு நாளைக்கு பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாக கழிவுநீர் ஓடையில் கலக்கிறது. இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே மாநகராட்சி நிர்வாகம் இனியும் காலம் தாழ்த்தாமல் குடிநீர் குழாய் உடைப்புகளை சரிசெய்ய வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: