இயக்க கோரிக்கை புதுக்கோட்டை மாவட்டத்தில்

புதுக்கோட்டை, ஜூன் 19: புதுக்கோட்டை மாவட்டத்தில் இறால் மீன் வீழ்ச்சியடைந்துள்ளதால் இழப்பை சந்தித்து வரும் மீனவர்கள் தினமும் பிடிக்கப்படும் இறாலுக்கு விலை நிர்ணயம் செய்ய வேண்டுமென தெரிவித்துள்ளனர். உலகிலேயே இரண்டாவது நீண்ட பெரிய கடற்கரையைக் கொண்ட மாநிலம் தமிழ்நாடு. ஆயிரம் கி.மீட்டருக்கும் அதிகமான கடற்கரையைக் கொண்ட தமிழகத்தின் 13 கடலோர மாவட்டங்களில் 500க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் உள்ளன.  தமிழகத்தில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகளும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட  நாட்டுப் படகுகளும், 26 ஆயிரத்திற்கும் மேற்பட்ட  கட்டு மரங்களும் மீன்பிடித் தொழிலில் பயன்படுத்தப்படுகின்றன. தமிழகத்தில் மீன்பிடிப்பின் அளவு ஆண்டுக்கு லட்சக்கணக்கான டன்களாகும். இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கோட்டைப்பட்டினம், ஜெகதாபட்டினம் ஆகிய இடங்களில் இருந்து 550 விசைப்படகுகளும், கட்டுமாவடி, புதுப்பட்டினம் உள்ளிட்ட 32 மீனவ கிராமங்களில் இருந்து 2 ஆயிரம் நாட்டுப்படகுகளில் மீன்பிடிக்கச் செல்கின்றனர். மீனவர்களால் நாள் ஒன்றுக்கு 150 டன்னில் இருந்து 200 டன் இறால் மீன்கள் பிடித்து விற்பனை செய்கின்றனர். ‘வங்கக் கடல், பாக் நீரிணைப் பகுதி மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகள் உள்ளிட்ட இந்திய கடல் பகுதியில் கிடைக்கும் இறால் மீன்களுக்கு தனி சுவை உண்டு. மேலும் இயற்கையாக கிடைக்கும் இந்த இறால் மீன்கள் ஜப்பான், சிங்கப்பூர் போன்ற நாடுகளில் அதிகம் விரும்பி வாங்கப்படுகிறது. இதனால், இங்குள்ள இறால் மீன்கள் ஏற்றுமதியில்  முதலிடம் பெற்றுள்ளன.  ஆனால் காலப்போக்கில் வெளிநாடுகள் பண்ணை இறால் வளர்ப்பை அதிகரித்ததால் பண்ணை இறால் மீன்களின் வரத்து இயற்கை இந்திய  இறால்களின் விற்பனையை குறைத்தது.இதுதவிர குறிப்பிட்ட சில ஏற்றுமதியாளர்கள் மட்டுமே இறால் ஏற்றுமதி தொழிலில் ஈடுபட்டுள்ளதால் கொள்முதல் செய்யும் இறால் மீன்களைப் பதப்படுத்தும் நிலையங்களும் குறைவாகவே உள்ளன. ஆயிரம் டன் இறால் பதப்படுத்த முடியும் என்றால் இப்போது இரண்டாயிரம்டன் இறால் வரும்போது அதை பதப்படுத்துவதும் முடியவில்லை. இதனால் கொள்முதல் அளவை குறைத்துக் கொள்ள வேண்டிய நிலை நிறுவனங்களுக்கு ஏற்படுகிறது.

ஒரு சில நிறுவனங்கள் வேண்டுமென்றே அதிக வரத்து இருக்கும்போது குறைவான அளவை மட்டும் கொள்முதல் செய்கின்றது.   இறால் ஏற்றுமதி நிறுவனங்கள் மற்றும் இறால் மீன் பதப்படுத்தும் நிலையங்களை அதிகப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் கூறியதாவது: சிங்கள கடற்படையினரின் தாக்குதல், சிறைபிடிப்பு, படகுபறிப்பு என பல இன்னல்களுக்கிடையே மீன்பிடித்து வந்தால் இங்குள்ள வியாபாரிகள் தங்களுக்குள் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளனர். அதிகமாக இறால் மீன் கிடைக்கும்போது விலையைக் குறைத்து விடுகின்றனர். இதனால், மீனவர்களுக்கு கிடைக்க வேண்டிய லாபத்தை பறித்துக் கொள்கின்றனர். ‘டீசல் விலை உயர்ந்த அளவுக்கு இறால் விலை உயரவில்லை. ஆனால், இறால் விலை வேகமாக குறைந்து வருகிறது. இங்கு மீன் பிடிபடகுகள் அதிகரித்த அளவுக்கு  இறால் ஏற்றுமதியாளர்கள் அதிகரிக்கவில்லை.அதேபோல எந்தவித செலவும் இல்லாமல் இறால் மீன் மூலம் அரசுக்கு கோடிக்கணக்காண ரூபாய் அன்னிய செலாவணி கிடைத்துவரும் நிலையில், இறால் மீன்களை பிடித்து வரும் மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மீன்களுக்கு விலை நிர்ணயம் செய்யும் முறையில் இறால் மீனுக்கு தினமும் விலை நிர்ணயம் செய்ய வேண்டும். விவசாயத்திற்கு கொடுக்கும் மானியம் போல் மீனவர்களுக்கும் மானியம் வழங்க வேண்டும். நாங்கள் பல்வேறு பிரச்சனைகளின் காரணமாக எங்களின் வாழ்வாதாரத்தை இழந்து வருகிறோம் என்றனர்.

Related Stories: