ஆரம்ப சுகாதார நிலைய துப்புரவு பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு

கடலூர், ஜூன் 18:கடலூர் மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றும் துப்புரவு தொழிலாளர்கள் மற்றும் இரவு காவலர்கள் சம்பள உயர்வு கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். அதில் அவர்கள் குறிப்பிட்டிருந்ததாவது: கடலூர் மாவட்டத்தில் 13 ஊராட்சி ஒன்றியங்களில் அமைந்துள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக 114 துப்புரவு பணியாளர்கள் மற்றும் இரவு காவலர்கள் பணியாற்றி வருகிறோம். காலை 8 மணிக்கு பணிக்கு சென்றால் இரவு 8 மணி வரையிலும், அதுபோல் இரவு 8 மணியிலிருந்து காலை 8 மணி வரையிலும் கடுமையாக பணியாற்றுகிறோம். ஆனால் குறைந்த மாத ஊதியமாக ரூபாய் 1500 மட்டுமே எங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு பொது சுகாதாரத்துறை இயக்குனரிடம் முறையிட்டு பல்வேறு போராட்டங்கள் நடத்தியதற்கு பின்னர் கடந்த 2017 ஆம் ஆண்டு பொது சுகாதாரத்துறை இயக்குனர் சம்பள உயர்வு தொடர்பாக ஒரு அரசாணை பிறப்பித்தார். அதன்படி மூன்று ஆண்டுகளுக்கு மேல் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் துப்புரவு தொழிலாளர்கள், இரவு காவலர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.285 ஊதியம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். ஆனால் அந்த உத்தரவு இதுவரை அமல்படுத்தவில்லை. குறைவான மாத ஊதியத்தால் துப்புரவு தொழிலாளர்கள், இரவு காவலர்கள் குடும்பங்கள் மிகவும் சிரமப்பட்டு வருகிறோம். எனவே பொது சுகாதாரத்துறை இயக்குனரின் ஊதிய உயர்வு குறித்த உத்தரவை உடனடியாக அமல்படுத்த வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடத்தியதற்காக சிலர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களையும் மீண்டும் பணியில் சேர்த்து அவர்களுக்கும் ஊதிய உயர்வினை வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

Related Stories: