லாரன்ஸ் பள்ளியின் 161 வது நிறுவனர் தின விழா

ஊட்டி, மே 25: ஊட்டி அருகேயுள்ள லவ்டேல் லாரன்ஸ் பள்ளியின் 161 வது நிறுவனர் தின விழாவை முன்னிட்டு நேற்று பள்ளி மாணவ, மாணவியர்களின் குதிரையேற்ற நிகழ்ச்சி நடந்தது. ஊட்டி அருகே லவ்டேல் பகுதியில் லாரன்ஸ் பள்ளி உள்ளது. இந்த பள்ளி மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் கட்டுபாட்டில் இயங்கி வருகிறது. இங்கு தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஏராளாமான மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர்.  

இந்நிலையில் லவ்டேல் லாரன்ஸ் பள்ளியின் 161வது  நிறுவனர் தின விழா நேற்று துவங்கியது. துவக்க நாளான்று புத்தக கண்காட்சி, பெற்றோர்- ஆசிரியர் கலந்துரையாடல் நிகழ்ச்சிகள் நடந்தது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியர் பிரபாகரன் தலைமை வகித்தார். ‘ஸ்பெக்டெக்கில் 2019’ என்ற தலைப்பில் கணிதம், அறிவியல், ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்ற குதிரையேற்ற நிகழ்ச்சி நடந்தது.

குதிரை மீது அமர்ந்து யோகா செய்தல், ஜிம்னாஸ்டிக் செய்தல், குதிரையேற்ற நிகழ்ச்சி, அணிவகுப்பு உள்ளிட்ட 16 வகை குதிரையேற்ற நிகழ்ச்சிகள் நடந்தது. இதில் பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்று பல்வேறு குதிரை சாகசங்களை செய்து அசத்தினர். குதிரையேற்றத்தில் வெற்றி பெற்ற பங்கேற்ற மாணவர்களுக்கு பாிசுகள் வழங்கப்பட்டன. இன்று  மாணவர்கள் பங்கேற்கும் அணிவகுப்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது. இதில் முன்னாள் ராணுவ படை தளபதி அஜித் நாயர் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்க உள்ளார். விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகம் செய்துள்ளது.

Related Stories: